வாய்ப்புகளை கையாளத் தெரியாத தமிழ் தலைமைகள் போகும் பாதைதி.திபாகரன். M.A.
„“இலங்கை தீவில் ஒற்றை ஆட்சி முறைமையின் கீழ் தமிழர்களுக்கு தீர்வு இல்லை““ என்று கொக்கரிக்கும் அனைத்து தமிழ் தலைமைகளும் தங்களின் அரசியல் கட்சிகள் மற்றும் அவர்கள் பரம்பரையினரும் ஒட்டியாட்சிக்குள்ளேயே அனைத்து ஆட்சி அதிகார சுகங்களையும் அனுபவித்து தேன்நிலவு கண்டார்கள் என்ற வரலாற்றை மறந்து விடுகின்றனர். இவர்களின் முன்னோர்கள் தமிழ் மக்களுக்கு செய்த துரோகங்களின், ஏமாற்றுக்களின், வாய்ச்சவடால்களின் விளைவுகளையே இன்று தமிழினம் அனுபவிக்கின்றது என்ற உண்மையையும் மறந்து விடுகின்றனர்.
இது இவர்கள் மீது வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டல்ல உங்கள் முன்னோர்களும், நீங்களும், உங்கள் கட்சிகளும் செய்த தவறுகளை புரிந்து கொள்ள வேண்டும். அதிலிருந்து பாடங்களைக் கற்று எதிர்காலத்திலாவது தமிழ் மக்களுக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் நடக்க வேண்டும் என்பதற்காகவே சுட்டிக்காட்டப்படுகிறது.
இலங்கை வரலாற்றில் 1621ல் யாழ்ப்பாண இராட்சியத்தை போர்த்துக்கேயர் கைப்பற்றிய பின்னரும் தமிழர் தாயகத்தை தனியான நிர்வாக அலகாகவே ஆட்சி செய்தனர். அதனைத் தொடர்ந்து 1658 ல் தமிழர் தாயகத்தின் அதிகாரம் ஒல்லாந்தர் கைக்கு மாறிய போதும் அவர்களும் தனியான நிர்வாக அலகாகவே ஆட்சி செய்தனர். அதனைத் தொடர்ந்து 1815ல் இலங்கை முழுமையாக கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இலங்கையை மூன்று பிரிவுகளாக நிர்வகித்த போதும் நிர்வாக செலவினை குறைப்பதற்காகவே 1883 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்ட கோல்புறூக் கேமரன் சீர்திருத்தத்தின் மூலமே இலங்கைத்தீவு ஒரு ஒற்றையாட்சியி கீழ் கொண்டுவரப்பட்டது.
இலங்கை தீவுக்கு சமஸ்டி ஆட்சிமுறைதான் பொருத்தமானது என்பதை முதலில் சொல்லியவர்கள் சிங்கள தலைவர்களேயாவர். கண்டிய மகாசபை 1925 ஆம் ஆண்டு சமஸ்டி கோரிக்கையை முன் வைத்தது. அதே நேரம் 1926 ஆம் ஆண்டு கரையோரச் சிங்களவரான எஸ்.டபுள்யு .ஆர்.டி.நாயக்க சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தார். அவர் கண்டிச்சிங்களாவர், கரையோரச் சிங்களவர், இலங்கைத் தமிழர் என மூன்று சமஸ்டி அலகுகளாக அவருடைய சமஸ்டி கோரிக்கை அமைந்திருந்தது. 1944ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டாக்டர் விக்ரமசிங்க சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் தேசிய இனம் பிரிந்து இலங்கைத்தீவில் தனியாக அரசு அமைக்கலாம் என்ற கருத்து கம்யூனிஸ்ட் கட்சியினால் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.
சுதந்திரமடையும்வரை ஒற்றையாட்சியை பலப்படுத்தவே அனைத்து தமிழ்த் தலைவர்களும் சேவகம் செய்துள்ளனர். இவ் ஒற்றையாட்சி தத்துவம் 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் பின்னரும் ஜி ஜி பொன்னம்பலம் 12.09.1948. மீன்பிடிக் கைத்தொழில் அமைச்சராக அமைச்சரவையில் இணைந்தார். 1954 ஆம் ஆண்டு வரை மந்திரி சபையில் அமைச்சரவை அமைச்சராக (cabinet minister) இருந்து ஒற்றையாட்சி ஸ்தாபிதம் அடைவதற்கும் அன்றைய கால தமிழரின் ஏகத் தலைமையான ஜி ஜி கடுமையாக சிங்கள தேசத்திற்காக உழைத்தார்.என்ற வரலாற்று அறிவிலிருந்து பகுதிநேர அரசியல் தமிழ்த்தலைமைகள் பாசாங்கிற்கு ஒற்றையாட்சியை எதிர்ப்பதும், பதவிக்காக ஒற்றையாட்சியை ஆதரித்து உழைத்த வரலாறையுமே ஈழத் தமிழினம் கண்டிருக்கிறது.
தமிழர்களுக்கான தனியான அரசியல் அதிகாரத்தை பெற்று ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்புகளையும், வழிவகைகளையும் சிங்கள தலைவர்கள் இலங்கை சுதந்திரத்திற்கு முன்னரே திறந்து விட்டிருந்தார்கள். ஆனால் 1936 தொடக்கம் 56 ஆம் ஆண்டு வரை தமிழர்களின் தனித் தலைமையாக இருந்த பொன்னம்பலம் இந்த வாய்ப்புகளை அனைத்தையும் உதறித்தள்ளி ஒற்றை ஆட்சிக்காகவே உழைத்து 1956 ஆம் ஆண்டு வரை ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒற்றை ஆட்சியை வலுப்படுத்துவதற்கு உழைத்துள்ளார்.
சோல்பெரி அரசியல் யாப்பு நகல் தயாரிப்பின் போது 50 க்கு 50 என்ற கோரிக்கையை முன்வைத்து 14 மணித்தியாலங்கள் அவர் பேசியதனை „“மரதன் பேச்சு““ அழைக்கின்றனர். இந்த 50க்கு 50 என்பது சிங்கள பௌத்தர்களுக்கு ஐம்பது விகிதம். ஏனைய இலங்கைத் தமிழர், மலையகத்தமிழர், இலங்கைச் சோனகர்கள், சிங்கள தமிழ் கிறிஸ்தவர்கள், பரங்கியர்கள், மலாயர்கள், மற்றும் மலையாளிகள் ஆகியோருக்கு ஐம்பது வீதம் என்பதுவே 50:50 கோரிக்கை இருந்தது. „“ 51:49 தந்தாலும் ஏற்கமாட்டேன்: என்று கூடச் சொன்னார் பொன்னம்பலம். இங்கே கணித ரீதியில் கணக்கிட்டுப் பார்த்தால் இயல்பாக தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஆசனங்கள்தான் இந்த 50:50லும் தமிழ் மக்களுக்கு கிடைக்கும். இந்த உண்மை ஜி.ஜி க்கு தெரிந்திருக்கவில்லை,
அத்தோடு 50க்குள் அடங்குகின்ற பல்வேறு பகுதியினரும் ஒவ்வொன்றாக பிரிந்து இருப்பதனால் இவர்களால் இலங்கை அரசியலில் எந்த செல்வாக்கையும் செலுத்த முடியாது. தமிழ் மக்கள் இதனைப் நடைமுறையாலும் அரச அறிவியலாலும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே 50:50 கணிதத்தில் தோற்றுப்போன, அரசியல் அறிவற்ற கொள்கையாகவும், தமிழ் மக்களுக்கு எந்த நலனையும் பயக்காத ஒரு கொள்கையாகவுமே அமைந்திருந்தது. இந்த 50:50 கோரிக்கையை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கைவிட்டதாக ஒரு போதும் இன்று வரை அறிவிக்கவில்லை. இந்த 50:50 கோரிக்கையை சிங்கள தலைவர் டி எஸ் என நாயக்காவும் ஆங்கிலேயரான சோல்பெரிப் பிரபுவும் நிராகரித்தனர். அதன் பின்னர் பொன்னம்பலம் ஒற்றையாட்சிக்காகவே முழுநேரமாக பாடுபட்டார். ஆனால் ஜி.ஜியால் தமிழ் மக்களுக்காக ஒரு செங்கல்லைத்தானும் பெயர்க்க முடியவில்லை.
1949 ஆம் ஆண்டு களத்தில் இறங்கி போராடினால் தான் தமிழர்களின் உரிமைகளைப் பெறமுடியும் என்ற கோசத்துடன் தமிழரசுக் கட்சி களத்துக்கு வந்தது. செல்வாவின் தலைமையில் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து தமிழ் மக்களுக்கான உரிமைப்போராட்டம் எழுச்சி பெறத் தொடங்கியது. ஆனாலும் இங்கு அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களிலும் பார்க்க அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கு எதிரான உள்ளூர் ஊர்வலங்கள், கூட்டங்கள், விவாதங்கள், அணி அணியாகச் சென்ற பிரச்சாரங்கள் என்பனவே பெருமளவில் அரங்கேறியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
1956ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி பெரும்பாலான ஆசனங்களை வடகிழக்கில் பெற்றதன் மூலம் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் நிலையை எட்டியது. அதனால் அது இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகப் போராட தொடங்கியது.
1956ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி தனிச் சிங்கள மொழிச்சட்ட மசோதாவுக்கு எதிராக காலிமுகத்திடலில் தமிழரசுக்கட்சி முதலாவது சத்தியாகிரகப் போராட்டத்தை தொடங்கி வைத்தனர். ஆனால் அந்தப் போராட்டம் சில மணி நேரங்களுக்குள் போலீஸ் மற்றும் சிங்களக் காடையர்களினால் அடித்து உதைத்து தமிழ் தலைவர்கள் காலிமுகத் திடலில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். இதுதான் இவர்கள் செய்த ஒரே ஒரு சத்தியாக்கிரகப் போராட்டமாகும். இதன் பின்னர் தமிழ் மக்களுடைய ஏகோபித்த ஆதரவைப் பெற்று அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆங்காங்கே நடத்தியது என்பது உண்மைதான் ஆனாலும் தமிழ் தலைவர்கள் காலிமுகத்திடல் போராட்டத்துக்கு பின்னர் எந்த ஒரு சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.
25/05/1958ல் வவுனியாவில் நடந்த தமிழரசுக் கட்சியின் 6வது தேசிய மாநாட்டுக் கூட்டத்தில் தலைவர் இராஜவரோதயம் சுந்தரலிங்கத்தின் ஆயுதம் தாங்கிய போராட்டமூடாகத் தனி நாடு அமைப்பது பற்றிப் பகிரங்கக் கோரிக்கைக்குப் பதில் அளித்தது பேசுகையில் ““நாம் கட்சியின் கொள்கையாக அகிம்செய் போராட்ட வழியை வரித்துக்கொண்டவர்கள் எனவே அதிலிருந்து அணுவளவும் விலகமாட்டோம்““ என்றும் ““ 19-08-1956 திருமலைத் தீர்மானத்தின்படி ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வாக தீர்மானித்துவிட்டோம். இத்தீவில் சிங்களமக்களுடன் ஐக்கியமாக வாழலாம் என நம்புகிறோம். தனிநாடு கோருபவர்கள் தவறான பாதையில் செல்கின்றனர் என விளக்கமளித்தார்(ஆதாரம் தமிழரசுக்கட்சி வெள்ளிவிழா மலர் பக் 142-146)
இந்தப் பின்னணியில்தான் தமிழரசுக்கட்சி வெகுஜனப்போராட்டங்களை தமிழர்தாயகத்திற்குள் சுருக்கி வாக்குவேட்டையை மட்டுமே இலக்காக்கி திருமலை யாத்திரை என ஆரம்பித்து ஊர்வலங்கள், மகாநாடுகள் கூட்டங்கள், என தமிழர் அரசியல் உரிமைக்கான குண்டாஞ்சட்டி போராட்டங்கள் தொடங்கின. 1962ல் யாழ் கச்சேரிக்கு முன்பாக 58 நாட்கள் தொடர்ந்து வழிமறிப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர். தமிழர் தாயகத்திற்குள் நடக்கும் நிர்வாகம் முடக்க போராட்டம் சிங்கள அரசுக்கு எத்தகைய நெலுக்கடியையும் கொடுக்காது என்பதற்கு அது நல்ல உதாரணமாகும்.
1956ல் காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம் போராட்டமும் 1962ல் நிர்வாக முடக்கப் போராட்டம் என்ற இரண்டு போராட்டங்களை தவிர பின்னாட்களில் சாத்வீக வழியிலான எந்த ஒரு பெரிய அளவிலான போராட்டத்தையும் தமிழ் மிதவாத அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளவில்லை என்பது மாத்திரமல்ல 1956 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டு வரையான 20 ஆண்டுகாலம் தமிழர்களின் ஏகத் தலைவனாக நின்ற எஸ்.ஜே.வி செல்வநாயகம் சிங்களத் தலைவர்களுடன் ““பண்டா-செல்வா ஒப்பந்தம்““, ““டட்லி-செல்வா ஒப்பந்தம்““, என்பன சிங்களத் தலைவர்களால் ஒருதலைப் பட்சமாக கிழித்தெறியப்பட்ட இறுதியில் செல்வநாயகம் கிழிறங்கிப்போய் மாவட்டசபைக்கு இணங்கி ஓற்றையாட்சியை ஏற்றுக்கொண்டும் தமிழ் மக்களுக்கு ஒரு உப்புக்கல்லைத்தானும் பெற்றுத்தர முடியவில்லை.
இந்தப் பின்னணியில்த்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய கூட்டு முன்னணி உருவாக்கப்பட்டது. இந்த முன்னணி தனித்தமிழீழத்தை அடைவதற்கான வழியாக, முதற் படியாக 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியது தமிழர் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது. அந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனமாகக தமிழர் விடுதலைக் கூட்டணி வைத்து தமிழ் மக்களின் 98 வீதமான வாக்குகளைப் பெற்றது.
தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் வெற்றி பெற்றதும் ““தமிழிழ நிழல் அரசாங்கத்தை““ உருவாக்குவது என்றுதான் கூறினார்கள். அதாவது தமிழீழக் மகாசபையை கூட்டுவது. அதன் பிரகாரம் அவர்கள் வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் திரண்டு தமிழீழக் கவுன்சிலை கூட்டி இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் கொழும்பு நாடாளுமன்றத்தில் கூடி சிங்கள அரசுக்கு விசுவாசப் பிரமாணத்தை செய்துகொண்டனர். இதன்மூலம் எதிர்க்கட்சி ஆசனத்தையும் பெற்றுவிட்டனர். எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றதன் மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் காற்றில் பறக்கவிடப்பட்டது.
தமிழ் தலைவர்கள் நாடாளுமன்ற அரசியல் மூலம் தமிழ் மக்களுக்கு உரிமைகள் பெறமுடியாத பட்சத்தில் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடுவார்கள் என வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் இரண்டாவது வழிவகையும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இரண்டாம் தெரிவுக்கு தமிழ் இளைஞர்கள் வேகமாக சென்று தமது கையில் ஆயுதத்தை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது.
இந்த நிர்ப்பந்தம்தான் தமிழ் மிதவாத அரசியல் தலைவர்கள் மீதும் அரசு ஒத்தோடிகள் மீதும் பெரும் சீற்றத்தையும், வெறுப்பையும் உருவாக்கியது. இதுதான் ““துரோகிகள் ஒழிப்பு““என்ற முதற்கட்ட ஆயுத பயன்பாட்டுக்கு விட்டது. அதுவே அல்பிரட் துரையப்பா தொடக்கம் துரோகிகள் ஒழிப்பு வரலாற்றை தொடக்கி வைத்தது. அதன் அடுத்த கட்டமாக இலங்கை ஆயுதப் படைக்கு எதிரான போராட்டங்கள் படிப்படியாக முளைவிட்டு வளரத் தொடங்கியது. ஆயுதப் போராட்ட கால அரசியல் பற்றி பிரித்து ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
தமிழ் மக்களுக்கு தீர்வாக 50:50, சமஸ்டிய, மாவட்ட சபை, தனிநாடு என்றும் நின்றுவிட்டு ஆயுதப் போராட்டம் முளைவிட்டபோது திடீரென குத்துக்கரணமடித்து மாவட்ட அபிவிருத்தி சபைக்கு கீழ் இறங்கி ஒற்றையாட்சியையே ஏற்றுக்கொண்டவர்கள் ஆயுதப்போராட்ட காலத்தில் தேசத்தை விட்டேடிவிட்டு தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் பேரழிவை சந்தித்ததன் பின்னர் மீண்டும் மிதவாத அரசிலுக்கவந்து கடந்த 14 ஆண்டுகளாக அழுத்தம் கொடுக்கிறோம், போராட்டம் வெடிக்கும், எச்சரிக்கிறோம் என வாய்ச்சவடால் விடுகிறார்கள்.
ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வில்லை என்றும், மாகாண ஆட்சி முறை பயனற்றது என்றும், 13ம் திருத்தச் சட்டத்தை புறக்கணிப்போம் என்றும், அதே நேரத்தில் மாகாண சபை தேர்தல் நடந்தால் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கோஷமிடுகிறது. அதே நேரத்தில் தமிழரசு கட்சி சமஸ்டியே தமிழர்களுக்கு சரியான தீர்வு என்றும், 13 பிழைசை ஏற்போம் என்றும் முன்னுக்குப் பின் முரணாக கூச்சலிடுகிறார்கள்.
எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒற்றை ஆட்சிக்காகவே உழைத்தவர்கள், ஒற்றை ஆட்சியோடு ஒத்தோடியவர்கள் இன்று இலங்கைத்தீவு எதிர்நோக்கி இருக்கின்ற தேர்தல்களை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு தீர்வு என்றும், தமிழ் மக்களுக்கு சமஸ்டிதான் தீர்வு என்றும் முதலைக்கண்ணீர் வடித்து பாசாங்கு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஏற்றாட்போலவே ஊடகங்களும் இந்த கட்சிகளுக்கு பின்னால் நின்று கட்சிகளின் ஊதுகுழல் ஊடகங்களாக மாறிக் கொண்டிருப்பதும் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை அடைவதற்கான வழிவகைகளையும் பின்னோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது என்பதுதான் இன்றைய துரதிஷ்டவசமான நிகழ்போக்காகும்.