நீதி கோரிய கதவடைப்பு:தயாராக தமிழ் மண்!
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தையும், கண்காணிப்பையும் வலியுறுத்தியும் நாளை வெள்ளிக்கிழமை (28) இடம்பெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண கடை அடைப்பிற்கும் பல தரப்பிலுருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாளை வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் மக்கள் இறுதி யுத்தத்தில் உறவுகளை இராணுவத்திடம் கையளித்த பகுதிக்கு அண்மையில் ஆரம்பிக்கும் கவனயீப்பு பேரணியானது முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்பாகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை சென்றடையவுள்ளது.
அங்கு மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனிடையே நாளை கதவடைப்பு போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் பூரண ஆதரவினை வழங்கவுள்ளது.
அதேபோன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளது.
இதனிடையே முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி விவககாரத்திற்கு நீதிகோரியும், சர்வதேச கண்காணிப்பை கோரியும் நாளை வெள்ளிக்கிழமை வடகிழக்கில் அனுஸ்டிக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்கங்களின் கோரிக்கைக்கு அமைய தமிழரசு கட்சி, தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆகியன தமது ஆதரவை தெரிவித்துள்ளன.
நாளை 28ஆம் திகதியை துக்க நாளாக அறிவித்துள்ளமையை நாமெல்லாம் ஆதரிக்க வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பூரண ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள போதும் ஏனைய மாவட்டங்களில் இதுவரை தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.