வலி வடக்கு காணிகளை விடுவிப்பதற்கான அளவீட்டு பணிகள் ஆரம்பம்
யாழ்ப்பாணம் வலி வடக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீ்டுப் பணிகள், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
அதன் போது, கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
„இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பிற்பட்ட காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அழிவு யுத்தம் காரணமாக இராணுவத் தேவைகளுக்காக அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவித்து காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2013 ஆண்டு காலப் பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக அரசுடமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அடிப்படையில் அரச காணிகளிகளாக சுவிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சுமார் 6300 ஏக்கர் காணிகளில் கணிசமானவை தற்போது விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
எனினும், குறித்த காணிகள் சட்ட ரீதியாக இப்போதும் அரச காணிகளாகவே காணப்படுகின்றமையினால், 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளப் பெறுகின்ற வகையில் புதிய வர்த்தமானி வெளியிட வேண்டியிருக்கின்றது.
இதுதொடர்பாக, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் விரிவாக கலந்துரையாடிய நிலையில், குறித்த 2013 வர்த்தமானியை மீளப்பெறுவதற்கும், தற்போதும் விடுவிக்கப்படாமல் இருக்கின்ற சுமார் 2900 ஏக்கர் காணிகளில் முடிந்தளவு காணிகளை விடுவிப்பதற்கும் காணி அளவீடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.“ என்று தெரிவித்தார்.