November 21, 2024

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு

தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு 110க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டுக்கான அனைத்துலகப் பொதுத்தேர்வை கவனமாகவும் கண்ணியத்துடனும் நேர்மையுடனும் 03.06.2023 சனிக்கிழமை நிறைவேற்றியுள்ளது.

இவ்வனைத்துலகப் பொதுத்தேர்வில் நாடுதழுவிய மட்டத்தில் 75 தேர்வு நிலையங்களில் 4000க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுத் தேர்வெழுதியுள்ளார்கள். ஒவ்வொரு நிலையத்திற்கும் ஒவ்வொரு பிரதம மேற்பார்வையாளரும் அவருடன் இணைந்து பணியாற்ற சராசரி நான்கு தொடக்கம் ஏழு துணைமேற்பார்வையாளர்கள் என்ற அடிப்படையில் ஏறத்தாழ 400க்கும் மேற்பட்ட ஆசிரியப்பெருந்தகைகளும் தமிழ்க் கல்விக் கழகத்தின் விதிமுறைகளுக்கேற்பக் கடமையுணர்வோடும் தமிழ்மொழியை வளர்க்கும் நல்லெண்ணத்தோடும் இவ்வுன்னத பணியில் ஈடுபட்டனர். பெரும்பாலான தமிழாலயங்கள் தனியாகவும் சில தமிழாலயங்கள் இணைந்தும் தேர்வு நிலையங்களை அமைத்திருந்தன.

காலை 08:45 மணி தொடக்கம் அனைத்து மாணவர்களும் தமிழாலயச் சீருடையை அணிந்தவாறு தங்கள் பெற்றோர்களுடன் தேர்வுமண்டபத்தை நோக்கி வருகைதரத் தொடங்கினார்கள். 09:15 மணிக்குத் தொடக்க நிகழ்வுகளுடன் தொடங்கப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு, 09:30 மணிக்குத் தேர்வாளர்கள் அனைவரையும் தேர்வு மண்டபத்தில் அமர்த்திச் சரியாக 10:00 மணிக்குத் தேர்வு தொடங்கப்பட்டது. அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நேர அட்டவணைக்கேற்ப ஆண்டு 1 தொடக்கம் 3 வரை 11:30 மணிக்கும் ஆண்டு 4 தொடக்கம் 6 வரை 12:00 மணிக்கும் ஆண்டு 7 தொடக்கம் 10 வரை 12:30 மணிக்கும் ஏனைய வகுப்புநிலைகளுக்கு 13:00 மணிக்கும் தேர்வு நிறைவுற்றது. ஓராண்டு காலம் தமிழாலயங்களில் தமது ஆசிரியர்களிடம் தாம் கற்றவைகளில் பெற்றுள்ள வினைத்திறன்களைத் தேர்வில் வெளிப்படுத்தினர் தமிழாலய மாணவர்கள். தேர்வு நிறைவடைந்த பின் தங்கள் கருத்துகளைப் பெற்றோர்களுடனும் சகமாணவர்களுடனும் தங்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுடனும் பரிமாறி மகிழ்ந்ததையும் பெற்றோர்களும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துத் தமது அன்பைப் பகிர்ந்து கொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

நிறைவுபெற்றுள்ள அறிமுறைத் தேர்வின் தொடர்ச்சியாக, 11.06.2023, 17.06.2023 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள புலன்மொழி வளத்தேர்விற்கான முன்னேற்பாடுகளும் நிறைவெய்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert