யாழில் நிலத்தடி நீரை நாசமாக்கிய நொதோர்ன் பவர் நிறுவனம் மீண்டும் இயங்க முயற்சி
சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவதற்கு காரணமான நொதேர்ன் பவர் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் மீளச் செயற்படுவதற்கு அனுமதிகள் வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்தமையால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் ஆராயப்படும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
சுன்னாகத்தில் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்தமையால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 372 பேருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட மக்களின் கிணறுகளை இறைப்பதற்கு 20 மில்லியன் ரூபா இழப்பீடாக நொதேர்ன் பவர் நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்தது.
அந்தப் பகுதி மக்கள் அதனை இழப்பீடாகப் பெற்றுக்கொள்வதற்கு தயக்கம்காட்டினர். இழப்பீட்டை பெற்றுக்கொண்டால் மீண்டும் நொதேர்ன் பவர் நிறுவனம் அங்கு செயற்படத் தொடங்கும் என்று அவர்கள் அச்சம் வெளியிட்டனர்.
இறுதியில் உதவித் தொகை என்று குறிப்பிட்டே அந்த மக்களுக்கு வழங்கினோம். அவர்களது கிணற்று நீரை பரிசோதிப்பதற்கு கட்டணம் செலுத்தி செய்ய முடியும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
அந்த மக்கள் தமது கிணற்று நீரையே இப்போதும் அருந்துகின்றனர். நொதேர்ன் பவர் நிறுவனம் மீளச் செயற்படுமா என கேட்கின்றனர் என்று உடுவில் பிரதேச செயலர் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அந்த நிறுவனம் மீள இயங்குதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அதற்கு அனுமதிக்கவில்லை. ஒருபோதும் அவர்களுக்கான அனுமதி வழங்கப்படாது என்று தெரிவித்தார்.