November 24, 2024

முறைப்பாடு வந்தால் பார்ப்போம்

இலங்கை தொல்பொருள் திணைக்களத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் சமகால நிலை தொடர்பிலான கலந்துரையாடல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதானிகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. 

வடக்கு, கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்த விவரண அறிக்கையொன்றை கடந்த மே 9ஆம் திகதி சிறீதரன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். 

அறிக்கையின் பிரதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் தூதுவர்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமை அமைப்புகளுக்கு தனித்தனியே அனுப்பியிருந்தார். 

இந்நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே ஆணைக்குழுவின் பிரதானிகளால் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

தனியாருக்கோ, மத நிறுவனங்களுக்கோ சொந்தமான காணிகளில் இடம்பெறும் ஆக்கிரமிப்புகள் மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்கள் தொடர்பில் உரிய தரப்பினர் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கின்றபோது, காவல்துறையில் முறைப்பாடு செய்தல், வழக்குத் தாக்கல் செய்தல் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தல் உள்ளிட்ட வழிமுறைகளையும் கையாளும் பட்சத்தில்,தமது நிறுவனம் சார்ந்து மேல்மட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert