இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெறுவதே எமது இலக்கு,
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் நீண்டகாலமாகவே உறுதியாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பகிர்வு தொடர்பிலான நாளையதினம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை குறித்து தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதிகாரப்பகிர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள அழைப்பை தாம் பயன்படுத்திக்கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை நாம் பயன்படுத்தாது விட்டவர்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஆழாகத் தாம் தயாரில்லை என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் எட்டப்படுகின்ற அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட இணக்கப்பாடுகள் நாடாளுமன்றத்தின் அங்கீகரத்தைப் பெற்று சர்வஜனவாக்கெடுப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மேலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய விடயங்கள் மீண்டும் மீளப்பெறமுடியாத வகையில் நிரந்தரமாக காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு தென்னிலங்கை தலைவர்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்றும் இதற்காக தாமும் பூரணமான ஒத்துழைப்பினை வழங்கத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.