November 23, 2024

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வீடு அமைந்துள்ள வல்வெட்டித்துறை , ஆலடி பகுதியில் கஞ்சி வழங்கும் நிகழ்வை மாணவர்கள் ஆரம்பித்து வைத்தனர்.

குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வு தொடர்பில் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவிக்கையில்,

தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை எமது உறவுகளுடன் பரிமாறி எமது இனம் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும், வலிகளையும் எமது இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளோம். 

இந்த உயிர் காத்த கஞ்சியினையே இன்று நாம் எமது உரிமை போராட்டத்தின் ஓர் வடிவமாக, எமது மக்களின் மீதான இனவழிப்பின் சர்வதேச நீதி தேடலின் ஓர் கருவியாக எமது இளம் சமுதாயத்திற்கு கடத்த வேண்டிய ஒரு கட்டுப்பாடில் நாம் அனைவரும் உள்ளோம். 

நாம் எமது இனவிடுதலையை அடையும் வரை இக்குறியீடு கடத்தப்படும் என உறுதியெடுக்கின்றோம். 

நாம் முன்னெடுக்கும் இச்செயல்பாட்டில் அனைத்து தமிழ் மக்களும் எல்லா வேறுபாடுகளையும் துறந்து தமிழினமாக எம்முடன் இணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

உங்களின் மாவட்டத்திற்கு வரும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கஞ்சிக்கு உரிய அரிசி மற்றும் இதர பொருட்களை வழங்கி விடுதலைக்கான பயணத்தில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

அத்துடன் தமிழர் தாயகம் எங்கும் இயங்கும் சமூக கட்டமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள், பொது நிறுவனங்கள், பாடசாலைகள், கல்லூரிகள், ஆலய நிர்வாகங்கள், சமூக இயக்கங்கள், தமிழ் தேசியத்தை நேசிக்கும் அரசியல் கட்சிகள், தனி நபர்களாகவும் கூட்டாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை உங்களை சூழ உள்ளவர்களுக்கு, குறிப்பாக இளையவர்களுக்கு பரிமாறி வரலாற்றையும் எங்கள் இனத்தின் வலிகளையும் தொடராக உலகெங்கும் உள்ள அனைவருக்கும் கடத்துமாறு வேண்டி நிற்கின்றோம் – என்றனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert