வேற்றுமையில் ஒற்றுமை!
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து கட்சி பேதங்களை கடந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்திருந்தனர்
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றிருந்தது.
தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டோரை தாக்கியதாகவும் விரட்டியதாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது .
விடயம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடுமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆலோசனை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் தையிட்டியில் போராடிவரும் மக்களை பாதுகாப்பு தரப்பு முற்றுகையிட்டுள்ளமையை கண்டித்தும், மக்களின் காணிகளை ஆக்கிரமித்து அனுமதியின்றி அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடடத்திலிருந்து வெளியேறியிருந்தனர்.
அங்கயன் இராமாநாதன்,எம்.ஏ.சுமந்திரன், சி. சிறிதரன், மற்றும் த.சித்தார்த்தன் ஆகியோர் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.
அவ்வாறு யாழ்.மாவட்ட செயலகத்திலிருந்து வெளியேறிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தையிட்டிப்போராட்டத்தில் இணைந்திருந்தனர்.
எனினும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தொடர்ந்து இடம்பெற்றிருந்தது.