November 23, 2024

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவுகூரலும்.

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்..

இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 35வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் அனைவரினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வானது 30.04.2023 ஞாயிறு அன்று சுவிட்ஸ் மாநிலத்தில்; உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவித்தலுடன் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களுக்குரிய ஈகைச்சுடரினைத் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்களுக்கு தனித்தனி ஈகைச்சுடர்களாக ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர், சுடர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலர்வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும் வழங்கப்பட்டன.

தமிழீழத் தேசிய விடுதலைக்காகத் தம்மையே அர்ப்பணித்தவர்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வில் அரங்கம் நிறைந்த தமிழ்மக்கள் கலந்து கொண்டதுடன், காணிக்கை நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் இன உணர்வுமிக்க எழுச்சி நடனங்கள், கவிவணக்கத்துடன் காலத்திற்கேற்ப கருப்பொருளைக் கொண்ட சிறப்புரையும் இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert