இலங்கையர்கள் இந்தியா சென்றே சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனராம்
ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்தும் புதிய முறை தொடர்பான தகவல்களை குடிவரவு திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.
பல ஐரோப்பிய நாடுகள் இலங்கையில் தூதரகங்களை நிறுவாமல் இந்தியாவில் இருந்து செயற்பட்டு இலங்கை தொடர்பான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவுக்குப் பயணிக்கும் இலங்கையர்கள் தரகர்கள் மூலம் போலியான தகவல்களை வழங்கி போலி விசாவைத் தயாரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் போக்கு காணப்படுவதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தெஹிவளையைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட மோல்டா வீசாவுடன் இந்தியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள தரகர் மூலம் குறித்த இளைஞன் விசாவை ஏற்பாடு செய்ததாக தெரியவந்துள்ளது.
விசாரணையின் போது சந்தேக நபரின் சகோதரியும் போலியான ஆவணங்களை தயாரித்து போலி விசா பெற்று இந்தியாவின் புதுடில்லிக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.