தமிழர் தயாகத்தில் படைகளின் பிரசனத்துடன் குடியேறும் புத்தர்
சிங்கள பேரினவாத இராணுவம் மற்றும் கடற்படை உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட திருகோணமலை – மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணி நிறைவை எட்டியுள்ளது.
இந்த நிலையில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பௌத்த விகாரையின் தேவைக்காக தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலை – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் 64ஆம் கட்டையிலுள்ள மலையடி பிள்ளையார் ஆலயம் அந்த வீதியால் பயணிக்கும் மக்களின் வழிபாட்டுத் தலமாகும்.
இந்த ஆலயப் பகுதிக்கு கடந்த 2021 டிசெம்பர் மாதம் பிக்குகள் குழு ஒன்று இரவு வேளை சென்றிருந்தது. அங்கு புத்தர் சிலை ஒன்றை அவர்கள் வைத்துச் சென்றனர்.
மறுநாள் காலை இதை அவதானித்த அப்பகுதி மக்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். இதையடுத்து, காவல்துறையினரின் தலையீட்டில் அங்கிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டது.
எனினும், சில நாட்களின் பின்னர் மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆலயத்தை அண்மித்து – ஆலய வளாகத்திலேயே மீண்டும் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து மலைப்பகுதியில் „கெட்டியாராமை சிறீ பத்ர தாது ரஜ மகா விகாரை” க்கான நிர்மாணப் பணிகள் நடை பெற்றன.
இராணுவமும் கடற்படையும் இணைந்து இரவு – பகலாக இந்த விகாரையின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த விகாரையின் நிர்மாணப்பணிகள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.
தென் தமிழீழம் திருகோணமலையில் ஏற்கனவே தமிழர்களின் முக்கியத்துவம் பெற்ற கன்னியா வெந்நீரூற்று முழுமையாக பௌத்த மயமாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, வட தமிழீழம் முல்லைத்தீவு – குருந்தூர்மலை, வவுனியா – வெடுக்குநாறி மலை என இந்து ஆலயங்கள் பல பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.