November 21, 2024

ரணிலே மொட்டுவின் வேட்பாளர்!

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பது மொட்டுக் கட்சியில் உள்ள பலரினதும் விருப்பம்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

“முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வரட்டும். அதன்பின்னர் வேட்பாளர் தொடர்பில் பேசி இறுதி முடிவு எடுப்போம்” என்றும் அவர் கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவிடம் வினவிய போது,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என மொட்டுக் கட்சியில் பலர் யோசனை முன்வைத்துள்ளனர். எனினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை வேட்பாளராகக் களமிறக்குவது தொடர்பில் மொட்டுக் கட்சி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடைபெறும் என்று தெரியாது. எனவே, வேட்பாளர் தொடர்பில் நாம் இப்போது அவசரப்படக்கூடாது.

மொட்டுக் கட்சி களமிறக்கும் ஜனாதிபதி வேட்பாளர்தான் வெற்றியடைவார் என்பது உண்மை.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறந்த தலைவர். அவர் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பது மொட்டுக் கட்சியில் உள்ள பலரினதும் விருப்பம். எனினும், இது தொடர்பில் அவருடன் நாம் உத்தியோகபூர்வமாகப் பேசவில்லை. முதலில் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு வரட்டும். அதன்பின்னர் வேட்பாளர் தொடர்பில் பேசி இறுதி முடிவு எடுப்போம்.” – என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert