கடன் வாங்கி காணி பிடிக்கும் அரசு!
சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக்கொள்ள படைக்குறைப்பினை முன்னெடுப்பதாக காட்டிக்கொள்ளும் இலங்கை அரசு மறுபுறம் முப்படைகளிற்குமான காணிபிடிப்பினை கைவிட தயாராக இல்லை.அவ்வகையில் யாழ்ப்பாணம் , ஊர்காவற்றுறை தம்பாட்டிப் பகுதியில் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக கை விடப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை தம்பாட்டிப்பகுதியில் கடற்படை முகாமை நிரந்தமாக அமைக்க நாரந்தனை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள காணியை சுவீகரிக்க காணியை அளவீடு செய்யும் பணி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்தது.இலங்கை நில அளவையாளர் திணைக்களத்தினால் அளவீட்டிற்கு முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் காணியை அளவீடு செய்ய வருகை தந்த நில அளவைத் திணைக்களத்தின் வாகனத்தை வழிமறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றிருந்தனர்.
ஏற்கனவே காரைநகர்,மாதகல் மற்றும் முல்லைதீவின் வட்டுவாகல் பகுதிகளில் கடற்படையினரின் நிரந்தர முகாம் அமைப்புக்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மக்கள் போராட்டத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.