November 23, 2024

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்கள் நான்கு மாதங்களாக சிறப்பு முகாமில் வாடுகின்றனர்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 வருட சிறை வாழ்க்கைக்கு பின்னர், விடுதலை அளிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த நால்வர் சிறப்பு முகாம் எனும் பெயரில் சிறையில் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி இவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், இந்திய குடியுரிமை உள்ளவர்கள் வெளியில் விடப்பட்டுள்ளனர்.  

ஆனாலும், இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ரபார்ட் பயஸ் ஆகிய நால்வரும் அன்றைய தினமே வேலூர் சிறைச்சாலையில் இருந்து திருச்சி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

அவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் சிறப்பு முகாம் என கூறப்பட்டாலும் , அது சிறைச்சாலையை விட மோசமான இடம் எனவும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறைகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை எனவும் , காலைக்கடன்களை கூட அறைக்குள்ளையே கழிக்க கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் , சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையவர்களுடன் தொடர்பினை பேணாத வகையில் கடும் கட்டுப்பாட்டுடன் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அது மாத்திரமின்றி விடுவிக்கப்பட்டவர்கள் இதுவரையில் வீட்டாருடன் தொலைபேசியில் உரையாடுவதற்கு கூட அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

அதேவேளை கடும் நோய்வாய்ப்பட்டுள்ள ராபர்ட் பயஸ் தனது உடல் நிலையையும் கருத்தில் கொள்ளாது தொடர்ந்து 3 நாட்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். 

இவர்களின் விடுதலை தொடர்பில் தமிழக முதல்வருக்கு பல மனுக்கள் கொடுத்த போதிலும் எந்த நடவடிக்கை இன்றி காணப்படுவதாகவும், தமிழக அரசியல்வாதிகளோ  இலங்கை தமிழ் அரசியல்வாதிகளோ இதுவரையில் அவர்களின் விடுதலை தொடர்பில் ஆர்வம் செலுத்தவில்லை எனவும் அவர்களின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

„இந்திய சட்டம் அவர்களை மனச்சாட்சியுடன் விடுதலை செய்தாலும் அரசியல் கோரப் பற்கள் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அறைகளுக்குள் வைத்து கொல்வதே நோக்காக கொண்டு இயங்குகின்றன“ எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert