அறிக்கை கோரும் ஆணைக்குழு!
கொழும்பில் தேசிய மக்கள் சக்தி நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தை தடுக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நேற்றைய தினம் உயரழுத்த நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் அறிக்கை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.
கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யூனியன் பிளேஸ் பகுதியில் இந்த பேரணி இடம்பெற்றபோது, அதனை தடுக்கும் வகையில் பொலிஸார் உயரழுத்த நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.
எவ்வாறாயினும், குறித்த பகுதியில் எதிர்ப்பு பேரணிகளை நடத்த தடைவிதித்து நீதிமன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்பதை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன் குறித்த அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.