துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ; மூவர் உயிரிழப்பு!
துருக்கியில் இரண்டு புதிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
அதில் சுமார் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், 213 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கியின் பேரழிவு மற்றும் அவசரகால நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிரியாவின் எல்லைக்கு அருகில் தென்கிழக்கில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி 20:04 மணிக்கு 6.4 ரிக்டர் அளவுகோளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்குப் பிறகு 5.8 நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் அன்டாக்யா, டெஃப்னே மற்றும் சமந்தாக் ஆகிய இடங்களில் நிகழ்ந்துள்ளன என்று உட்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு கூறினார், மேலும், ஆபத்தான கட்டடங்களுக்குள் நுழைய வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தினார்.
பெப்ரவரி 6ஆம் திகதி துருக்கி மற்றும் சிரியாவை அழித்த பாரிய நிலநடுக்கங்களால், நிலநடுக்கத்தால் வலுவிழந்த கட்டடங்கள் இரு நாடுகளிலும் இடிந்து விழுந்தன.
முந்தைய நிலநடுக்கங்களில் துருக்கி மற்றும் சிரியாவில் 44,000பேர் உயிரிழந்தனர் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.