November 23, 2024

ரணில் தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிவிடுகிறார்: 13 குறித்து சிறீதரன்

சமஷ்டி அடிப்படையில் தீர்வொன்று வழங்கப்படாவிடின் நாடு மீண்டுமொரு இருண்ட யுகத்தை நோக்கி செல்வதை எவராலும் தடுக்கமுடியாது எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஜனாதிபதி ரணில் தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிவவதை போல செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமிழர்களுக்கு ஒன்றையாட்சிக்குள் தான் தீர்வு என்று மீண்டும் மீண்டும் கூறினால் இலங்கையினால் ஒருகாலமும் மீண்டெழ முடியாது.

எனவே, உலகிலுள்ள ஏனைய நாடுகளை போல சமஷ்டி அடிப்படையில் ஒரு தீர்வை முன்வைக்கப்பதன் மூலமே நாட்டில் நீதியை, அமைதியை கொண்டுவர முடியும்.

சிங்களவர்களும், தமிழர்களும் இலங்கையின் இரண்டு தேசிய இனங்களாக இணைந்து வாழக்கூடிய ஒரு அரசியல் உரிமையையே கோருகிறோம்.

அது அதியுச்ச அதிகாரப்பகிர்வாகவும், சமஷ்டி அடைப்படையில் மீளப்பறிக்கப்படமுடியாததுமாக இருக்க வேண்டுமென்று கடந்த கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு கோருகிறோம்.

ஒற்றையாட்சி என்ற கோசம் எழுப்பும் சிங்களத் தலைவர்களுக்கு இந்த நாடு இருண்ட யுகத்தை நோக்கி பயணிப்பது தெரியவில்லை.

13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு 35 ஆண்டுகளாகிறது. இன்று அது உருதெரியாமல் போயுள்ளது.

28 க்கும் மேற்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சுற்றறிக்கைகள் மூலம், 13 ஆம் திருத்தத்தில் உள்ள சில விடயங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

13 ஆவது திருத்துக்கு எதிராக இன்று பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஜனாதிபதியின் ஆதரவு இல்லாமல் அது சாத்தியப்படாது.

தீர்வை வழங்கப்போவதாக சர்வதேசத்துக்கு ஒரு முகத்தை காட்டும் ஜனாதிபதி ரணில், மறுபுறம் பௌத்த பிக்குகளையும் இனவாதிகளையும் தூண்டிவிடுகிறாார்.

அவரின் இந்த செயல் தொட்டிலையும் ஆட்டிவிட்டு, பிள்ளையையும் கிள்ளி விட்டு போன்று உள்ளது.

எங்களது மண்ணில் நாங்கள் கௌரவமான அரசியல் தீர்வோடு வாழ்வதற்கு விரும்புகிறோம். சமஷ்டி இன்றி வழங்கப்படும் தீர்வு இந்த நாட்டை மீண்டுமொரு இருண்ட யுகத்துக்கு இட்டுச் செல்வதை எவராலும் தடுக்கமுடியாது என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert