இங்கிலாந்து வந்தடைந்தார் உக்ரைன் அதிபர்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்து, வெஸ்ட்மின்ஸ்டரில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி லண்டன் வந்தடைந்தார்.
பெப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பின்னர் இது ஜெலென்ஸ்கியின் இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் ஆகும். இந்த நேரத்தில் ரஷ்யப் படைகளை வெளியேற்றுவதற்கு உதவுவதற்கு மேலதிக ஆயுதங்களை வழங்குமாறு மேற்கு நாடுகளை உக்ரைன் வலியுறுத்துகிறது.
போர் விமான ஓட்டிகள் மற்றும் கடற்படை வீரர்களை உள்ளடக்கிய உக்ரேனிய துருப்புக்களின் பயிற்சியை விரிவுபடுத்த இங்கிலாந்து உறுதியளித்துள்ளது. மேலும் உக்ரேனிய விமானிகள் எதிர்காலத்தில் அதிநவீன நேட்டோ தரமான போர் விமானங்களை ஓட்ட முடியும் என்பதை இந்த பயிற்சி உறுதி செய்யும் என்றார்.
மேற்கத்திய நாடுகள் புதிய ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உக்ரைனுக்கான இராணுவ ஆதரவின் உறுதிமொழிகளை அதிகரித்துள்ளன. ஆனால் இதுவரை உக்ரைன் கேட்ட போர் விமானங்களை வழங்க மறுத்துவிட்டன.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் இங்கிலாந்து பயணம் அவரது நாட்டின் தைரியம் உறுதிப்பாடு மற்றும் சண்டைக்கு ஒரு சான்றாகும். மேலும் நமது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உடைக்க முடியாத நட்புக்கு சான்றாகும் என்று சுனக் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கு கூடிவரும் நிலையில் உக்ரைன் ஜனாதிபதியும் நாளை வியாழக்கிழமை பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 24 அன்று ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து லண்டன் மற்றும் பிரஸ்ஸல்ஸ் பயணம் என்பது நாட்டிற்கு வெளியே ஜெலென்ஸ்கியின் இரண்டாவது அறியப்பட்ட பயணமாகும்.
அவர் டிசம்பர் இறுதியில் வாஷிங்டனுக்குச் சென்று காங்கிரசில் உரை நிகழ்த்தினார் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.