முன்னணி தனி ஆவர்த்தனம்:மாணவர்கள் சீற்றம்!
இலங்கையில் நாளைய தினமான சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று இடம்பெறும் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் 13ஜ காரணம் காட்டி குழப்பம் விளைவிப்போருக்கு தமிழ் மக்கள் தேர்தலில் நல்ல பாடத்தை புகட்டுவார்கள் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரித்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகிய நாம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து தமிழ் மக்களுக்கான உரிமைக்கான போராட்டத்தை சுதந்திர தினத்தன்று முன்னெடுக்கவுள்ளது.
தமது கோரிக்கையாக தமிழ் மக்களுடைய உரிமைக்கான போராட்டத்தினை பொங்கு தமிழ் பிரகடனத்தின் வழி நின்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து மட்டக்களப்பு வரை பேரணியாகச் செல்லவுள்ளது
பேரணிக்கு தமிழ்த் தேசிய கட்சிகள் பல பூரண ஆதரவை வழங்கியுள்ள நிலையில் சிவில் சமூகம் வர்த்தக சங்கங்கள் பூரண ஆதரவை வழங்கியுள்ளன.
ஆனால்; தமிழ் தேசிய மக்கள் முன்னணி 13 வது திருத்தத்தை நிராகரிக்கிறோம் என எமது பேரணியில் காட்சிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றது.
தமிழ் மக்கள் 13-வது அரசியல் தீர்வாக ஏற்கவில்லை என்பது தமிழ் மக்களோடு பயணிக்கின்ற கட்சிகளும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டது.
எமது பேரணியானது பொங்கு தமிழ் பிரகடனத்தின் பிரகாரம் சுயநிர்ணய உரிமை, மரவுவழித்தாயகம் ,தமிழ்தேசியம் மக்களின் எதிர்பார்ப்பு அதையே நாம் முன்னிலைப்படுத்துகிறோமென மாணவர் ஒன்றிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாளை சனிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகம் முன்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுமென கட்சியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் அறிவித்த்துள்ளார்.