November 22, 2024

இராணுவத்திற்கு காணி வழங்க முடியாது

யாழ்ப்பாணம் – அச்சுவேலி,  அக்கரை சுற்றலாக் கடற்கரையில் கடற்படைக்கு காணி வழங்கப்படுவதற்கு பிரதேச செயலகம் மேற்கொண்ட முடிவை ஏற்க முடியாது. எனது அனுமதி இன்றி காணியை வழங்க முடியாது என வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் ஆட்சியில் உள்ள அக்கரை கடற்கரை சுற்றுலா மையத்தில், கடற்படையினருக் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்குப்  பிரதேச செயலகம் கடிதம் மூலம் பிரதேச சபைக்கு அறிவித்துள்ளது. 

இவ் அறிவிப்பினைத் தொடர்ந்து உள்ளூராட்சி மன்றிற்கு உரிய முடிவுகள் தொடர்பாக தவிசாளர் என்ற முறையில் சபையின் நிறைவேற்று அதிகாரியான தனக்கே உண்டு என்பதை பிரதேச செயலாளருக்கு சுட்டிக்காட்டி , படைத்தரப்பிற்கு காணியை வழங்க முடியாது எனவும். பிரதேச செயலகத்தினால் கடற்படையினருக்கு காணி வழங்க எடுக்கப்பட்டுள்ள முடிவை உடனடியாக நிறுத்துமாறும் பிரதேச செயலருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். 

இக் கடிதத்தின் பிரதிகள் ஆளுநர், அரச அதிபர், மாகாண காணி ஆணையர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளது.

குறித்த காணி பிரதேச சபையினால் காலாகாலமாக சுற்றுலாத்துறைக்கு என மில்லியன் கணக்கில் முதலீடு செய்யப்பட்டு  எல்லைப்படுத்தப்பட்டுள்ளது.  சுற்றுலா மையம் மற்றும் சிறுவர் பூங்காவை உள்ளடக்கிய கடற்கரையாக மக்கள் பாவனையில் உள்ளது.  அவ்வாறான பிரதேசத்தில் பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரியான தனக்கோ அல்லது பிரதேச சபைக்கோ எதுவித அறிவிப்புக்களும் இன்றி வெளிப்படைத் தன்மையற்ற முறையில் கிராம சேவையாளர், கடற்படையினர் சென்று இரகசியமாக பார்வையிட்டுள்ளனர். 

 இது அரச நிர்வாகத்திற்கு இருக்கவேண்டிய வெளிப்படைத்தன்மையினையும் சட்டம் ஒழுங்கையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இதனையும் மீறி அதிகாரிகள் நடந்து கொள்வார்கள் ஆயின் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒரு புறத்தில் அரசாங்கம் படைத்தரப்பினரிடம் உள்ள நிலங்களை விடுவிப்பதாகவும் மறுபுறத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களையே மீறி அவர்களுக்குச் செந்தமான காணியை படைத்தரப்பின் தேவைகளுக்கு அபகரிப்பதாகவும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.  –

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert