நிலாவரையில் தவிசாளருக்கு எதிரான வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெற நடவடிக்கை
நிலாவரை, கிணற்றுப் பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவதற்கான ஆவணத்தினை இம்மாத இறுதிக்குள் தயார்ப்படுத்தி மன்றில் சமர்ப்பிக்குமாறு அச்சுவேலி பொலிஸாருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மல்லாகம் நீதிமன்றில் இன்றைய தினம் (பெப். 1) புதன்கிழமை காலை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கினை முன்கொண்டு செல்வதற்கான சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற, அதற்குரிய ஆவணம் ஏன் அனுப்பப்படவில்லை என பொலிஸாரை நோக்கி நீதிபதி வினவினார்.
அத்துடன் இம்மாதத்துக்குள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கான ஆவணத்தை தயாரித்து சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து நிலாவரை கிணறு அமைந்துள்ள வளாகத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் அத்திவாரம் போன்று வெட்டுவதற்கு இரண்டு முறை முயற்சித்த நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதனையடுத்து அங்கு தொல்லியல் திணைக்களத்தின் முயற்சிகள் கைவிடப்பட்டன.
பின்னர், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர், அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டார்.
அதன்போது தவிசாளருக்கு தொல்லியல் திணைக்களத்தின் கருமங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு அதிகாரம் இல்லை என்று பொலிஸ் அதிகாரிகள் தவிசாளரிடம் கூறினர்.
எனினும், பிரதேச சபையானது நிலாவரையை தொடர்ச்சியாக பராமரித்து வருகிறது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையில் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு உரிமையுள்ளது என கூறி தவிசாளர் வெளியேறினார்.
இந்நிலையில் பெருந்தொகை இளைஞர்களை அழைத்து வந்து, தமது அரச கருமத்துக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்கள் தடை ஏற்படுத்தியதாக கூறி, மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, கடந்த இரண்டு வருடங்களாக வழக்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிலாவரையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற சமகால பகுதியிலேயே குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களம் பௌத்தமயமாக்கத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.