November 21, 2024

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க நிகழ்வானது சுவிஸ் சொலத்தூர்ண் மாநிலத்தில் 22.01.2023 ஞாயிறு அன்று உணர்வெழுச்சியுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின்; ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசிய மாவீரர் பொதுக்குறியீட்டுக்கான ஈகைச்சுடர், மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து வரலாற்று நாயகர்களுக்கான ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவித்தலுடன் அகவணக்கம், சுடர்வணக்கம,; மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர் மற்றும் மலர்வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை ஆரம்பித்த வரலாற்று நாயகர்களான, விடுதலைப் போராட்டத்தின் முதற் களப்பலியான மாவீரர் லெப்டினன்ட் சங்கர் (சுரேஸ்), தாக்குதல் தளபதி லெப்டினனட் சீலன் (ஆசீர்), வீரவேங்கை ஆனந்த், லெப்டினன்ட் செல்லக்கிளிஅம்மான், கப்டன் லாலா ரஞ்சன், தென்தமிழீழத்தின் மட்டுமண்ணில் முதல் வீரச்சாவடைந்த மாவீரர் லெப்டினன்ட் ராஜா (பரமதேவா), கப்டன் பண்டிதர் (இளங்கோ), கப்டன் றெஜி, மேஜர் அல்பேட், கப்டன் லிங்கம், லெப். கேணல் விக்டர், மேஜர் கணேஸ், லெப். கேணல் பொன்னம்மான், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச்சதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன், தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினர் லெப். கேணல் சந்தோசம், தமிழீழத் தேசியத்தலைவரின் பெருந்தளபதி கேணல் கிட்டு, மூத்த உறுப்பினர் லெப். கேணல் அப்பையா போன்றவர்களின் நினைவுகள் சுமந்ததுமான இவ்வெழுச்சி நிகழ்வில் நூற்றுக்கணக்கான சொலத்தூர்ண் மாநிலம் வாழ் மக்கள் அரங்கம் நிறைந்து கலந்துகொண்டிருந்தமையானது உணர்வுபூர்வமாகவும், நம்பிக்கையைத் தருவதுமாக அமைந்திருந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் பல நெருக்கடியான சூழல்களையும், சவால்களையும் வென்று நிலைபெறுவதற்கு வேர்களான அடிக்கற்கள் நினைவு சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், கவிவணக்கத்துடன், சிறப்புப் பேச்சும்; இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடல் அனைவராலும் பாடப்பட்டதோடு தமிழீழத்
தேசியக்கொடி கையேந்தலினைத் தொடரந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert