துரோகிகள் தமிழரசு: ஜனநாயகப்போராளிகள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதோ இ.கதிர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழீழ விடுதலைப்புலிகளுடைய முழுமையான அனுசரணையுடன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய சிந்தனைக்கு அமைவாக காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்டது. அந்த காலத்தில் நான்கு கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு இலங்கை தமிழரசு கட்சியினுடைய சின்னத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டு வந்தது.
தொடர்ச்சியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியினுடைய வீட்டு சின்னத்திலே போட்டியிட்டு வெற்றிபெற்று வந்திருக்கின்றது. இருப்பினும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு மிகுந்த பின்னடைவை சந்தித்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது தமிழரசுக் கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தனித்துவமாக பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டுவதற்கு தயாராகி வருகிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தந்தை செல்வாக்கு பின்னர் அந்த கட்சி செயலிழக்கப்பட்டு ஒரு சந்தர்ப்பவாத அரசியல் போக்கோடு செயல்பட்டது.
நான் நினைக்கின்றேன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகும் வரைக்கும் தமிழரசு கட்சி ஒரு செயலிழந்த கட்சியாகவே பார்க்கப்பட்டது தமிழீழ விடுதலைப்புலிகள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கி வீட்டுச் சின்னத்தை ஒரு பொதுச் சின்னமாக தலைவர் அங்கீகாரம் வழங்கி நாங்கள் ஒரு தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தினோம்.
இன்று தமிழரசுக் கட்சி தனித்துவமாக முடிவை எடுத்து ஒரு தொழில்நுட்ப முறை என்றும் ராஜதந்திர முறை என்றும் கருத்துக்களை மக்கள் மத்தியில் கூறிக்கொண்டு, வீட்டுச் சின்னம் தான் தமிழ் மக்களுடைய சின்னம் என்றும், தமிழரசுக் கட்சி தான் தமிழ் மக்களுடைய தாய் கட்சி என்றும் வலியுறுத்தி ஊடகங்களிலே செய்தி வெளியிட்டு வருகின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பும் ஊடகப் பேச்சாளர் பொறுப்பும் எங்களிடமே இருக்கின்றது என்று தமிழரசு கட்சி கூறி வருகின்றது. உண்மையாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஐந்து கட்சிகளைக் கொண்டு தற்போதைய காலத்தின் தேவை உணர்ந்து ஒரு புதிய பரிணாம வளர்ச்சி கண்டு இங்கு நிற்கின்றது.
அந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி என ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக குத்துவிளக்கு சின்னத்தில் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றது. இந்த சூழலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது தனித்துவமாக தமிழரசு கட்சி இல்லாமல் செயல்பட்டு வருகின்றது.
இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பிலிருந்து இரா சம்பந்தன் விலக்கப்படுகின்றார், கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரன் விலக்கப்படுகின்றார். எனவே சம்பந்தன் வெறுமனே திருகோணமலை மாவட்டத்தின் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும், சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்ற நிலை இங்கே உருவாகி இருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் என்பது கூட்டுத் தலைமைத்துவமாக மிக விரைவில் அறிவிக்கப்படும். உண்மையாக தலைவருடைய சிந்தனைக்கும் நம்பிக்கைக்கும் மிக மோசமான ஒரு குரோதத்தனமான வேலையை செய்து இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி இருக்கின்றது.
கூட்டமைப்பை அழித்து மிதவாத அரசியல்வாதிகளையும் தங்கள் வசப்படுத்தி தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உண்மையாக தமிழரசுக் கட்சி துணை நிற்கின்றது. இந்த நிலையில் இன்று தமிழரசு கட்சி மக்களுக்கு செய்திருக்கின்ற மிக மோசமான துரோகத்தனமான செயற்பாட்டை மக்கள் மிகத் தெளிவாக புரிந்து கொண்டுள்ள வேண்டும்.
ஆகவே வருகின்ற தேர்தல்களில் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குளை வழங்க வேண்டும் என்பதை நான் இந்த இடத்தில் வலியுறுத்தி கூறுகின்றேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக கருத்துக்களை கூறுவதற்கும் மக்களுக்கு பணியாற்றுவதற்கும் முழுமையான உரிமை உரித்து உடையவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள். அந்த வகையிலேயே இந்த கருத்தை மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளர்.