இலங்கையில் மீண்டும் வரிசை அபாயமா? அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல் ;
நாட்டில் மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கட்டண திருத்தம் செய்யப்பட்ட பிறகும் இலங்கை மின்சார சபைக்கு மாதாந்தம் சுமார் 35 பில்லியன் ரூபாய் மாத்திரமே கிடைக்கின்றது.
ஜனவரி மாதத்தில் மட்டும் மின்சார விநியோகத்திற்கான நிலக்கரிக்கு 38.45 பில்லியன் ரூபாய் தேவை.
மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை ஏப்ரல் 25ஆம் திகதிக்கு முன்னதாகக் கொள்முதல் செய்ய வேண்டும், அதன் பிறகு செப்டெம்பர் வரை நிலக்கரி ஏற்றுமதி செய்ய முடியாது.
மேலும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், உயர்தரப் பரீட்சைகளின் போது தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மேலதிகமாக 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான எரிபொருள் தேவைப்படுகின்றது என மின்சார சபைக்கு அறிவித்துள்ளதுடன் தற்போது அதனை வழங்க முடியாது.
கட்டண திருத்தம் என்பது அரசாங்கமோ அமைச்சரோ எடுக்கக்கூடிய கடினமான முடிவாகும்.
நாங்கள் தேர்தலை சந்திக்கும் நேரத்தில் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏன் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும்.என்று தெரிவித்துள்ளார்.