1008வது தடவை:13ஜ அமுல்படுத்தவும்!
13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து, உரையாற்றுகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் இணைந்துகொண்ட இந்த சந்திப்பின் போது, இந்தியாவுடனான கூட்டாண்மை, நாட்டை பொருளாதார மீட்சியை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து கலந்துரையாட ஜனாதிபதியை விரைவில் இந்தியாவிற்கு வருமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கடிதத்தை ஜெய்சங்கர் கையளித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா (இலங்கையின்) நம்பகமான அண்டை நாடு, நம்பகமான பங்காளி மற்றும் இலங்கைக்கு தேவை ஏற்படும்போது, எந்த தொலைவுக்கு செல்ல தயாராக உள்ள ஒரு நாடு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தனது இலங்கைப் பயணம், பிரதமர் மோடியின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கை என்று வலியுறுத்திய ஜெய்சங்கர், இந்த தேவைப்படும் நேரத்தில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்றார்.
அத்துடன், திருகோணமலையை ஒரு வலுசக்தி மையமாக மேம்படுத்தும் திறன் இலங்கைக்கு உள்ளது. அத்தகைய முயற்சிகளுக்கு நம்பகமான பங்காளியாக, இந்தியா தயாராக உள்ளது.
ஒத்துழைப்பை முன்னோக்கி கொண்டு செல்லும், புதுப்பிக்கத்தக்க சக்தி கட்டமைப்புக்கு, கொள்கை அடிப்படையில் இன்று இணக்கம் எட்டப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.