Oktober 16, 2024

யாழில். ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு உதயம்

தமிழரசு கட்சி ஒரு ஆசனத்தை பெறுவதே சந்தேகம். தேசிய பட்டியல் ஊடாக செல்வதற்கு இப்பவே சிலர் முயற்சிகளை எடுத்துள்ளதாக தமிழரசு கட்சியின் கொழும்பு கிளையின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார். 

யாழில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

தமிழரசு கட்சி தனிப்பட்ட நபர் ஒருவருடைய கம்பெனி அந்த கம்பெனியில் இருக்க நாங்கள் தொடர்ந்து இருக்க விரும்ப வில்லை. அதனால் விலகி விட்டோம். 

அதற்காக நாங்கள் தமிழ் தேசியம் அழிவதை வேடிக்கை பார்க்க முடியாது. அதனால் வேறு அமைப்பை உருவாக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டோம். அதனால் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம் அந்த அமைப்பின் ஊடாக தேர்தலில் போட்டியிடவுள்ளோம் 

எதிர்வரும் காலத்தில் மாகாண சபை உள்ளூராட்சி தேர்தல்களில் கூட போட்டியிடவுள்ளோம். ஒரு கட்சி எவ்வாறு செயற்படுமோ அதே போன்று எமது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு செயற்படும். 

எங்களுடன் வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உதயன் பத்திரிகை நிறுவனர் ஈ சரவணபவன் உள்ளிட்டோர் இணைந்து கொள்ளவுள்ளனர். எமது கட்சிக்கு இளைஞர்களின் வரவை எதிர்பார்க்கிறோம். 

எமது கட்சி தொடர்ச்சியாக மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும். அதற்காக நாங்கள் உயிரை கொடுத்து உழைப்போம். 

தேர்தலில் தமிழரசு கட்சிக்கு சவாலாக இருப்போம். மக்களுக்கு தெரியும். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெரியும் தமிழரசு கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைப்பதே சந்தேகம். தேசிய பட்டியலில் உள்நுழையும் நோக்குடன் இப்போதே சிலர் இருக்கின்றார்கள்.  ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு , தமிழரசு கட்சியை விட அதிக வாக்குகளை பெறுவோம். 

அதேவேளை பிரிந்து நிற்கும் தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். எல்லோரையும் இணைத்து செயற்பட தயாராக உள்ளோம். நாங்கள் ஒண்றிணைந்தால் தான் எமக்கு பலம் என மேலும் தெரிவித்தார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert