September 16, 2024

பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் – எச்சரிக்கும் ரஷ்யா

உக்ரைனில் (Ukraine) மட்டுமன்றி பிரித்தானிய நிலைகள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் என ரஷ்யாவின் (Russia) பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படையாக கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பிரித்தானியா (UK) வழங்கியுள்ள ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தினால், ரஷ்யா கடுமையான தாக்குதலில் இறங்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் மேலும்  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த அறிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் இரு நாடுகளும் நேரடியாக மோதும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.

இதற்கான காரணம், பிரித்தானியா பல நவீன ரக ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ள நிலையில், அமெரிக்கா வழங்கியுள்ள ஆயுதங்களைக் காட்டிலும் , பிரித்தானியா சிறிய அளவிலான ஆயுதங்களை தான் கொடுத்துள்ளது.

எனினும் பிரித்தானியா கொடுத்துள்ள ஆயுதங்கள் என்பது, பல மடங்கு அழிவை ஏற்படுத்தக் கூடியவை என்பது ஒரு புறம் இருக்க, அவை மிக மிக நவீன ரக ஆயுதங்கள் ஆகும். இதனால் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு பெரும் பங்கம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் உக்ரைன் படைகள் பிரித்தானியா வழங்கிய சலெஞ்சர் 2 கவச வாகனங்களைப் பயன்படுத்தியே ரஷ்யாவுக்குள் ஊடுருவி நிலைகொண்டுள்ளதுடன், பிரித்தானியா மேலும் பல நவீன ஏவுகணைகளை உக்ரைனுக்கு கொடுத்துள்ளது.

ரஷ்யாவில் கைதான பிரித்தானிய நபர்

ரஷ்யாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு பிரித்தானிய நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் அந்நாட்டில் உளவு பார்த்தார் என ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

பிரித்தானிய உளவுத் துறையைச் சேர்ந்த குறித்த நபரை தாம் கைதுசெய்துள்ளதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளதுடன் கடும் ஆத்திரமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலைமை மோசம் ஆனால் ரஷ்யா, உக்ரைன் மற்றும் வேறு நாடுகளில் உள்ள பிரித்தானிய தளங்களை ஏவுகணை கொண்டு தாக்கக் கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை அவ்வாறு நடந்தால் பிரித்தானியா இதற்கு பதிலடி கொடுக்கவேண்டிய சூழ் நிலை உருவாகுவதுடன் இது மூன்றாம் உலகப் போருக்கு வித்திடலாம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert