Mai 14, 2024

வவுனியாவில் ZOOM வகுப்பு என்ற பெயரில் இடம்பெறும் பண வசூல் : பாதிக்கப்படும் ஏழை மாணவர்கள்!!

 

வவுனியாவில் 6- 11 வரையான தமது பாடசாலை மாணவர்களிடம் தனியார் கல்வி நிலையம் என்னும் பெயரில் 1000 ரூபாய் பணம் வசூலித்து சூம் வகுப்புக்கள் நடைபெறுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில்,

பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக நாம் எமது மாணவர்களை தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுப்பும் போது அங்கு தரம் 6 – 11 வரை பாடம் ஒன்றுக்கு 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலேயே கட்டணம் அறவிடப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது கொரோனா நெருக்கடி நேரத்தில் அரச சம்பளத்தைப் பெறும் அரச பாடசாலை ஆசிரியர்கள் சிலர் தமது பாடசாலை மாணவர்களையும், தமது தனியார் கல்வி நிலையங்களின் பெயரில் சூம் வகுப்புக்களில் உள்ளீர்த்து வகுப்புக்களை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் மாதம் ஒன்றுக்கு ஒரு மாணவரிடம் ஒரு பாடத்திற்கு 1000 ரூபாய் கட்டணத்தை அறவிடுகின்றனர். குறிப்பாக தரம் 6 மாணவர்கள் தமது வகுப்புக்கான எல்லா பாடங்களையும் கற்பதற்கு 9000 ரூபாய் பணத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது.

தமது பாடசாலை மாணவர்களுக்கு சூம் வகுப்புக்களை நடத்தாது தாம் பணம் சம்பாதிக்கும் நோக்கில் தனியார் கல்வி நிலையத்தின் பெயரில் இத்தகைய சூம் வகுப்புக்களை நடத்தி தமது பாடசாலை மாணவர்களிடமே 1000 ரூபாய் அறவிடுவது எந்த வகையில் நியாயம் என பெற்றோர் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.