September 11, 2024

வந்தது இந்திய தேர்தல் நிதி?

வழமை போலவே இம்முறையும் கொரோனா தொற்றிற்கு மத்தியிலும் கூட்டமைப்பிற்கு இந்திய நிதி வந்து சேர்ந்துள்ளது.

திங்கட்கிழமை யாழிலுள்ள இந்திய தூதரகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளது.
எனினும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை திருகோணமலையில் உள்ள வீட்டில் மூடிய கதவுகளின் பின்னால் இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்தது ஏன் என்ற கரிசனை வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சம்பந்தன் இந்திய தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பு தவிர எந்த விடயம் குறித்தும் கருத்துவெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.
திருகோணமலையின் நிலாவெளியில் உள்ள ஆடம்பர ஹோட்டலொன்றில் இந்திய தூதரக அதிகாரிகள் வேறு பல கட்சிகளை சேர்ந்தவர்களையும் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை அமைச்சர் விமல்வீரவன்ச இந்த சந்திப்பு குறித்து அச்சம் வெளியிட்டுள்ளார்.
அவர்கள் எதனையோ மறைக்க முயல்வதன் காரணமாகவே ஊடகங்களை கேள்வி கேட்க வேண்டாம் என தெரிவிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
எங்களை பொறுத்தவரையில் வெளிநாட்டு தூதரகங்களுடன் மக்களுக்கு தெரிவிக்க முடியாத உடன்பாடு எதுவுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிப்படுத்த முடியாதது என்றால் இது கவலையளிக்கும் விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இம்முறை வடக்கில் கூட்டமைப்பின் வெற்றி கேள்விக்குறியாகியிருக்கின்ற நிலையில் கிழக்கை இந்திய தூதரகம் கவனத்தில் கொண்டுள்ளது.
அதிலும் இரா.சம்பந்தரது வெற்றி வாய்ப்பும் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் இச்சந்திப்பு நடந்துள்ளது.
இதனிடையே இரா.சம்பந்தனிற்கு போட்டியாக களமிறங்கியுள்ள முன்னாள் மூத்த போராளி ரூபன் தொடர்ச்சியாக புலனாய்வு பிரிவினரது அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.