Juli 25, 2024

ஈபிடிபிக்கு வாக்களித்தால் ஏதும் நடக்காது?

சிங்களக் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் வேட்பாளர்களுக்கும் ஈபிடிபி போன்ற அரச அடிவருடிக் கட்சிகளுக்கும் வாக்களித்தால்த் தான் அபிவிருத்தி செயற்பாடுகள் நடைபெறும் என்றும் தொழில்வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் பிரச்சாரம் தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகின்றது. இதில் எந்த வித உண்மையும் இல்லை என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் தாங்கள் தான் வேலை எடுத்துக் கொடுத்ததாக உங்களுக்குக் கூறுவது எல்லாம் முழுமையான பொய்ப் பிரசாரங்கள். அரசாங்கம் இங்கே நிலைபெற வேண்டுமாகில் இங்கே சிவில் நிர்வாகத்தை நடத்துவதற்கு அவசியமான முறையில் எமது இளைஞர் யுவதிகளுக்கு ஒரு குறிப்பிட்டளவு தொழில்வாய்ப்பை வழங்கவேண்டி இருக்கின்றது. இவற்றைத்  தமது அடிவருடிகள் ஊடாக வழங்கி அவர்கள் தான் உங்களுக்கு வேலை எடுத்துத் தந்ததாக அல்லது தரப் போவதாக ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்துகின்றார்கள்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வடக்கு கிழக்கு இருந்த போது கூட இத்தகைய சில அவசியமான வேலைவாய்ப்புக்களை அரசாங்கம் வழங்கித்தான் இருந்தது. அது அரசின் கடமை. இல்லை என்றால் அரச ஆணை இங்கு எடுபடாமல்ப் போகும். ஆனால் அவ்வாறான கட்டாய வழங்கல்களை விட அரசாங்கம் புதிதாக எதனையும் எமது மக்களுக்கு செய்யவில்லை. செய்யப்போவதுமில்லை.
உங்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக உங்களுக்கு சில உதவிகளை அவர்கள் செய்துவருவதை நான் அறிவேன். அவர்கள் தருவதை எல்லாம்  தயக்கம் இன்றி வாங்குங்கள். ஆனால் அவர்களின் அச் செயல்களுக்கு நீங்கள் எந்த விசுவாசமும் காட்டவேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால் அவர்கள் உங்களை, உங்கள் வாக்குகளை தாங்கள் வாங்க முடியும் என்று நினைக்கின்றார்கள். அவர்கள் வாங்குவது அவர்களுக்குப் பின்னணியில் இருக்கும் அரசாங்கத்துக்கே. எம் உறவுகளைக் கொன்று குவித்த அரசாங்கத்துக்கே. ஆகவே வாக்களிக்கச் செல்லும் போது இந்த விசுவாசத்தை, நன்றி உணர்வுகளை எல்லாம் மறந்துவிடுங்கள். எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தமது இளமைக் காலத்தைத் தொலைத்து உயிர்த் தியாகம் செய்த ஆயிரக்கணக்கான எமது இளைஞர் யுவதிகளை உங்கள் மனக் கண் முன் கொண்டுவாருங்கள். மனச்சாட்சிப் படி உங்கள் வாக்குகளை  அளியுங்கள். அவர் தந்தார் இவர் தந்தார் என்பதற்காக முழுத் தமிழ்ச் சமூகத்தையும் இக்கட்டினுள் கொண்டு சென்றுவிடாதீர்கள்.
ஏறத்தாழ இரண்டு லட்சம் இளைஞர் யுவதிகள் வடக்கு கிழக்கில் வேலை இல்லாமல் இருக்கின்றார்கள். சிங்களக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களை நீங்கள் தெரிவுசெய்தால் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்? சாதாரணமாக நடைபெறும் ஆட்சேர்ப்பு உள்ளடங்கலாக சில நூறு பேர்களுக்கு மட்டுந்தான் இவர்களால் வேலை பெற்றுக்கொடுக்க முடியும். நான் முன்னர் கூறியது போல, இவ்வாறு சாதாரணமாக நடைபெறும் ஆட்சேர்ப்புக்களை கூட சிங்களக் கட்சிகள் தமது இங்கிருக்கும் பிரதிநிதிகளுக்கு ஊடாக வழங்கி ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். தென் மாகாணத்தில் சென்ற அரசாங்கம் வேலை கொடுத்த 2,000 பேரின் வேலைகளை இந்த அரசாங்கம் பறித்து இப்போது அவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளார்கள். அரசாங்கம் வேலை கொடுக்கும் என்பது ஒரு மாயம்.
ஆகவே, சிங்களக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களை அல்லது அவர்களின் அடிவருடிகளின் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதால் எமது மக்களின் வேலை இல்லாப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். தமிழ் மக்களை பொருளாதார ரீதியாக வலுப்பெறாமல் வைத்திருப்பதற்கான சிங்கள அரசாங்கங்களின் உத்திகளில் எமது மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்காமல் இருப்பதும் ஒன்று. இதனை சுதந்திரம் கிடைத்த நாள் முதல் அரசாங்கங்கள் செய்து வருகின்றன. இனப் பிரச்சினைக்கான காரணங்களில் இதுவும் ஒன்று. ஆகவே, சிங்களக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிலரை தமிழ் மக்கள் தெரிவுசெய்துவிட்டால் அல்லது சிங்களக் கட்சிகளின் கையாட்களாக இங்கு உலாவுவோரைத் தெரிவு செய்துவிட்டால் எமது வேலை இல்லா பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிடும் என்று நினைப்பது மகா முட்டாள்தனம்.
அரசாங்கங்களின் கடந்த கால அணுகுமுறைகளைப் பாருங்கள். கடந்த 5 வருடங்களாக ஒட்டுமொத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கத்தின் பாதுகாவலர்களாகவும் அரசாங்கத்தின்  பகுதியாகவுமே செயற்பட்டு வந்திருந்தார்கள். ஆனால், வேலை இல்லா பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்ததா? எத்தனை பேருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வேலை எடுத்துக் கொடுக்க முடிந்தது? சில நூறு பேர்களை வேண்டுமானால் விரல் விட்டு எண்ணலாம். மாறாக, வடக்கு கிழக்கின் பல வெற்றிடங்களுக்கு தென் இலங்கை மக்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தார்கள். இதனைக்கூட கூட்டமைப்பினால் தடுக்க முடியவில்லை. தாதியர் பற்றாக்குறை என்று தெற்கில் இருந்து கொண்டு வந்து சிங்கள சகோதரிமாரை நியமித்திருக்கின்றார்கள். பெண் தாதியர் தமிழரிடையே குறைந்துள்ளார்கள் என்றால் ஆண் தாதியர் தொகையைக் கூட்டியிருக்கலாமே. அப்படிச் செய்யாமல் சிங்களப் பெண் தாதியரையே அனுப்பியுள்ளார்கள்.
ஏறத்தாழ 30 வருடங்களாக டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்தில் அமைச்சராக இருந்துள்ளார். அதேபோல, வேறு சில தமிழர்களும் அரசாங்கத்தில் அமைச்சர்களாக  இருந்துள்ளனர். ஆனால், இவர்களால் எமது மக்களின் வேலை இல்லாப் பிரச்சினைக்கு அன்றும் சரி இன்றுஞ் சரி தீர்வு காண முடிந்ததா? டக்ளஸ் தேவானந்தா தற்போதும் அமைச்சராக இருக்கின்றார். ஆனால்,  அவருக்கு அடுத்த தேர்தலில் வாக்குப் போட்டால்த் தான் அவரால் வேலை எடுத்துக் கொடுக்க முடியுமா? இப்பவே அதைச் செய்யலாமே! ஆகவே, உண்மை என்னவென்றால், எத்தனை தமிழர்கள் அரசாங்கத்தில் அமைச்சர்கள் ஆகினாலும், வேலை இல்லாப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அதேபோல, எமது பகுதிகளில் அபிவிருத்தியையும் அவர்களினால் செய்யமுடியாது. அரசாங்கம் இவர்களைத் தமது எடுபிடி வேலைக்காரர்கள் போல தமது இனஅழிப்பு நிகழ்ச்சித்திட்டத்துக்கு பயன்படுத்துகின்றது என்பதே உண்மை. அதை எம்மவர் தெரிந்து கொண்டிருக்கின்றார்களோ இல்லையோ அது தான் உண்மை.
எமது மக்களின் தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு ஆகியவை பற்றி வலியுறுத்துவதை எல்லாம் விட்டுவிட்டு அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்து அவர்களின் ஒரு பகுதியாக நான் செயற்பட்டால் இங்குள்ள சிங்களக் கட்சிகளின் பிரதிநிதிகளை விட, அரசாங்கங்கள் சார்ந்த கட்சிகளை விட இன்னும் சற்று கூடுதலானவர்களுக்கு என்னால் வேலை எடுத்துக் கொடுக்க முடியும். ஏனென்றால் தென்னவர் பலருடன் வாழ்ந்தவன் நான். பாராளுமன்றத்தில் பலர் என் பழைய கல்லூரியின் மாணவர்கள். ஆனால், எனக்கு நீங்கள் வாக்குப் போட்டாலும் போடாவிட்டாலும் பரவாயில்லை அத்தகைய ஒரு வேலையை நான் செய்யப் போவதில்லை. இப்படி நான் செய்வது என்னை நானே வளர்ப்பதற்கும்  சலுகைகளைப் பெறுவதற்கும் மட்டுமே உதவும். இது மகா பாவம். மகா துரோகம். எமக்கு உரிமைகள் வேண்டும். பெரும்பான்மை மக்களின் சலுகைகள் தேவையில்லை. சலுகைகள் மூலமாக எதனையும் பெற்றுவிட்டுப் பிதற்றுவதில் எந்தப் பயனும் இல்லை.
ஆகவே வேலையில்லாப் பிரச்சினை மட்டுமல்ல எமது மக்கள் இன்று எதிர்கொள்ளும் எல்லா பிரச்சினைகளுக்கும் நிரந்தரமான தீர்வு காண்பதற்கு இருக்கும் ஒரே வழி வடக்கு கிழக்கில் எம்மை நாமே ஆளும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதுதான். அதனால்த் தான் சம~;டித் தீர்வை வலியுறுத்தி நாம் உங்களிடம் வாக்குக் கேட்கின்றோம். நீங்கள் நினைப்பதுபோல இது இலகுவான ஒன்று அல்ல. ஒரு இன முரண்பாட்டின் நீண்ட அகன்ற வட்டத்துக்கு உட்பட்ட ஒன்று. ஆனால் எமது இந்த முரண்பாடு ஏற்கனவே நீண்ட தூரம் கடந்துவிட்டிருக்கின்றது. நாங்கள் சிறந்த உபாயங்களைக் கையாண்டு, எமது புத்தியைப் பயன்படுத்திச் செயற்பட்டால் எமது உரிமைகளை விரைவில் பெறுவதற்கான வழிகள் உள்ளன. சில சமயம் இன்னமும் சற்று கூடுதல் காலம் எடுக்கலாம். ஆனால் உரிமைகள் கிடைக்கும் வரையில் எம்மவர் போராட வேண்டும். இல்லையென்றால் பறங்கியர் போல் எமது தனித்துவத்தை நாம் இழந்து பெரும்பான்மையினருள் சங்கமமாகி விடுவோம்.
அதேசமயம், அரசாங்கத்தில் தங்கி இருக்காமல் எமது பொருளாதாரத்தையும் வாழ்வையும் நாமாகவே உருவாக்கிக்கொள்ள நாம் முன்வர வேண்டும். பல வழிகள் எமக்கு இருக்கின்றன. எமது புலம் பெயர் மக்கள் இருக்கின்றார்கள். தமிழ் நாட்டில் 6 கோடி தொப்பிள்க் கொடி உறவுகள் இருக்கின்றார்கள். அவர்களுடன் சேர்ந்து பொருளாதார விருத்திக்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.
இன்று அநேகமான நாடுகள் திறந்த பொருளாதார சந்தையில் சங்கமம் ஆகி இருக்கின்றன. மூன்றில் இரண்டு பகுதிக்கும் அதிக வேலை வாய்ப்பு தனியார் துறையிலும் சுய தொழிலிலுமே ஏற்பட்டுள்ளன. இன்று வடக்கு கிழக்கில் ஏராளமான தமிழ் இளைஞர், யுவதிகள் தகவல் தொழில்நுட்பம், இணைய வர்த்தகம், ஆடை விற்பனை, விவசாயப் பண்ணை போன்ற துறைகளில் சுய தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். அதேபோல, ஏராளமான எமது புலம்பெயர் உறவுகள் தொழிற்சாலைகள், விவசாயம், மீன்பிடித்தொழில் என்று பல துறைகளில் முதலீடுகளைச் செய்து ஆயிரக் கணக்கானவர்களுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்கள். அரசாங்கம் கொடுத்துள்ள வேலை வாய்ப்புக்களை விட இவ்வாறு ஏற்பட்டுள்ள தொழில் வாய்ப்புக்கள் அதிகம் என்று நான் நினைக்கின்றேன்.  ஆகவே 100 பேருக்கு வேலை கொடுத்துவிட்டு 10,000 பேருக்கு வேலை கொடுத்ததாகப் பிரச்சாரம் செய்து மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள்.
அத்துடன் எம் முன்னே இருக்கும் வாய்ப்புக்களை எல்லாம் நாம் முயற்சி செய்துபார்க்காமல், சில நூறு பேர்களுக்கு அரசாங்க வேலையை பெற்றுக்கொள்வதற்காக  எமது உரிமைகளை எல்லாம் கைவிட்டுவிட்டு சிங்கள கட்சிகளின் பிரதிநிதிகளுக்கா வாக்கு போட வேண்டும்? இதுவரை காலமும் சிங்களக் கட்சிகள், சில்லறைக் கட்சிகளின் பிரமுகர்கள், சிங்களக் கட்சிகளின் அடிவருடிக் கட்சிகள் எத்தனை நூறு வேலைகளை மக்களுக்குப் பெற்றுத் தந்துள்ளார்கள் என்று ஆராய்ந்து பாருங்கள். அப்போது உண்மை புரியும்.
“பல வாய்ப்புக்கள் இருப்பதாகக் கூறுகின்றீர்கள். ஆனால், எமது அரசியல் தலைமைகள் அவற்றில் எதையுமே செய்யவில்லையே” என்று நீங்கள் எங்களிடம் கேட்கலாம்.   ஆனால், அது உண்மை அல்ல. 30 வருடங்கள் யுத்தம் நடைபெற்ற போது எமது மக்களின் வாழ்க்கை தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவுக்கு உட்பட்டதாகவே இருந்தது. நாம் சாதித்தவை ஏராளம். இது வரலாற்று உண்மை. எமது மக்கள் மத்தியில் இருந்துதான் அத்தகைய செயல்வீரர்கள் உருவாகி இருந்தார்கள். ஆனால், யுத்தம் முடிவடைந்து கடந்த 10 வருடங்களில் எமக்குத் தடுமாற்றம் ஏற்பட்டு தெளிவும் இல்லாமல் சென்று விட்டது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை விளக்குவது இங்கு பொருத்தம் அல்ல. ஆனால், நாம் எமது சென்ற காலப் பிழைகளில் இருந்தும்  அனுபவங்களில் இருந்தும் பாடம் கற்றுக்கொண்டிருக்கின்றோம். ஆகவே, நாம் மீண்டும் எழுவோம்- நம்பிக்கை கொள்ளுங்கள். சலுகை வேண்டாம்,  எமக்கு உரிமையே வேண்டும் என்று சிந்தியுங்கள் – வாக்களியுங்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் சில்லறைக் கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் இடையே எந்தவித வேறுபாடும் இல்லை என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. கடந்த 5 வருடங்களில் தாங்கள் அரசாங்கத்திடம் இருந்து பெற்ற பதவிகளும் சலுகைகளும் போதாது என்று தற்போது அமைச்சுப் பதவிகள் வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறிவருகின்றார்கள். ஆகவே, சிங்கள கட்சிகளில் போட்டியிடுபவர்களை மட்டுமல்ல அவர்களின் நேசக் கட்சிகளை மட்டுமல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பையும் ஒட்டுமொத்தமாக நீங்கள் இம்முறை தோற்கடிக்கவேண்டும்.
நாம் இப்போது விழித்தெழாதுவிட்டால் எப்போதுமே  எழ முடியாமல் போகும். ஆகவே, எமது மூவேந்தர்களில் ஒருவரான பாண்டியனின் மீன்  கொடி பட்டொளி வீசிப் பறந்து உங்கள் பெருமைகள், கீர்த்திகள் உரிமைகளை மீட்டெடுக்க வழி சமைக்க வாருங்கள் என க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.