Juli 24, 2024

இனி இணக்க அரசியலுக்கு இடமில்லை….

அரசாங்க சார்புக் கட்சிகளுக்கு வாக்கிடுவதால் தமிழ் மக்களின் வருங்காலம் பிரகாசமடையாது. அரசாங்க சார்புக் கட்சிகள் எனும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனுள் அடங்கும். மாறாக மேலும் மேலும் தமிழ் மக்கள் வாழ்க்கை சிங்கள ஆதிக்கத்தினுள் அமிழ்ந்துவிடும். கடந்த நான்கரை வருடங்களாக நல்லாட்சி என்ற பெயரில் உருவான அரசாங்கத்துடன் இணக்க அரசியலைச் செய்து வந்த கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எந்த விதமான பலமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் காலத்தைக் கடத்திவிட்டு தற்போதைய தேர்தல்க் காலத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதும் கண்துடைப்பு வேலைகளையே செய்து வருகின்றார்கள். இனி இணக்க அரசியலுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.

நேற்று (16) வடமராட்சி உடுத்துறையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம் முறை பாராளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது. இனி இணக்க அரசியலுக்கு இடமில்லை. நாம் கொள்கை ரீதியாக எமது பாதையை வகுத்து அதில் நாட்டமுடனும் நேர்மையுடனும் பயணிக்க வேண்டியுள்ளது.

அதன் போது பல சிக்கல்களுக்கு நாம் முகம் கொடுக்க நேரிடும். தற்போது எம் மக்களின் மனதில் பயத்தை ஊட்டவல்லதாக இருப்பது எம் மத்தியில் விரிவுபடுத்தப்பட்டுவரும் இராணுவப் பிரசன்னமே.

பல வேட்பாளர்களின் வீடுகளுக்கு புலனாய்வு அதிகாரிகள் செல்கின்றார்கள். அங்கு அவர்கள் வேட்பாளர்களின் இதுவரையான பயணங்கள், இனிப் போகப் போகும் இடங்கள், கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ள இடங்கள் போன்ற பல விபரங்களை குறித்துக் கொண்டு செல்கின்றார்கள் என்று தெரியவருகின்றது. இதனால் வேட்பாளர்கள் பயத்தில் இருக்கின்றார்கள் என்று கேள்வி. இவ்வாறான செயல்கள் மக்களை வாக்களிக்கச் செய்யவிடாது.

அதுமட்டுமல்ல. பாதைகளில் பல வீதிச் சோதனைச் சாவடிகள் வந்து கொண்டிருக்கின்றன. ஜுலை 5ந் திகதி தேர்தல் ஆணையகத்தின் கிளிநொச்சி தேர்தல் அலுவலர் மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்த போது இரு தடவைகள் நிறுத்தப்பட்டார். அவரின் மோட்டார் சைக்கிள் பின் பெட்டியைத் திறக்க அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். தேர்தல் ஆணையக அதிகாரிக்கு இந்த நிலை என்றால் பொது மக்களின் பாடு எவ்வாறிருக்கும் என்று யூகிக்க முடியும். இத்தனைக்கும் இவ்வாறான அதிகாரம் பொலிசாருக்கே உண்டு. இராணுவத்தினருக்குக் கிடையாது. அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரே இராணுவத்தினருக்கு இவ்வாறான அதிகாரங்கள் வந்து சேருவன. கொரோனா காரணத்தினால் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆகவே மக்களும் அதிகாரிகளும் மீண்டும் பயத்தில் வாழத் தொடங்கியுள்ளார்கள். இந்தப் பயம் தேர்தலைப் பாதிக்கக்கூடும்.

2013ல் நான் வடமாகாணசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் காலத்தில் அரசாங்க சார்பு வேட்பாளர்களின் நன்மைக்காக அரச வளங்களை திட்டமிட்டு தவறான முறையில் பயன்படுத்தினார்கள். அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக்கூறி தேர்தல் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. பல வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தலுக்கும் வன்முறைகளுக்கும் ஆளானார்கள். இவ்வாறு தேர்தல் சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டன. ஜனநாயகம் இந் நடவடிக்கைகளினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. காலை வெகு நேரம் வரையில் மக்கள் வாக்குச் சாவடிகளுக்குப் போகாது போவதைத் தவிர்த்தனர்.

அப்போது ஆட்சியில் இருந்தவர்களின் ஆதரவாளர்கள் சட்டத்திற்குப் பயப்படாமல் குடா நாடு எங்கும் வலம் வந்தார்கள். வாக்குகளைச் சிதறடித்து தமிழ் மக்கள் சார்பான கட்சிகள் வெற்றியீட்டுவதைத் தவிர்ப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அப்படி இருந்தும் மக்கள் மிகச் சாதுர்யமாக வாக்களித்து என்னை 133,000க்கு மேலான வாக்குகளைப் பெறச் செய்து வெற்றி எய்திக் கொடுத்தார்கள். இன்று அன்றைய அரசாங்கமே மீண்டும் வந்துள்ளது. அதுவும் அன்று இராணுவத்தை வழிநடத்தியவர் இன்றைய ஜனாதிபதி.

இம்முறை கொரோனா வேறு வந்துவிட்டது. மக்கள் நோய்க்குப் பயந்து வாக்களிக்காது இருந்தால் தமிழ் மக்களின் வருங்காலம் இருள் சூழ்ந்ததாய் ஆகிவிடும். ஏற்கனவே பல விதங்களில் வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கலும் பௌத்த மயமாக்கலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தக்க கொள்கைகளுடன் செயலாற்றும், நேர்மையுள்ள, பயப்படாத வேட்பாளர்களை எமது மக்கள் தேர்ந்தெடுக்காவிட்டால் சென்ற 5 வருடங்களில் தமிழ்ச் சமூகம் பாதிப்படைந்தது போலவே மேலும் வருங்காலத்தில் பாதிப்படையும். ஆகவே நாங்கள் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

நாம் தேர்தல் வாக்களிப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இராணுவத்தை முகாம்களில் முடக்குமாறு கோரவிருக்கின்றோம். சட்டம் ஒழுங்கின் பாதுகாவலராய் பொலிசாரை நியமிக்குமாறும் இராணுவத்தினரை திரும்ப எடுக்குமாறும் அரசாங்கத்திடம் கோரவிருக்கின்றோம். தேர்தல்களின் போது சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கு ஆயுதப்படைகளைப் பயன்படுத்துவதை சட்டரீதியாக நியாயப்படுத்தமுடியாது. நாட்டின் உள்ளகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிசாருக்கு அரசியலமைப்பு மூலமான கடமை உள்ளது. அதுவும் தேர்தல்களின் போது அவர்களுக்கு பல கடப்பாடுகள் உண்டு. ஆகவே பொலிசாரின் செயற்பாடுகளை பலப்படுத்துவது சம்பந்தமாகவும் கோரவிருக்கின்றோம்.

அத்துடன் தேர்தல் ஆணையகம் சகல பாதுகாப்பு பணிகளையும் பொலிசார் மூலம் செய்ய வேண்டிய ஒரு கடப்பாடுடையது. இதையும் உரியவர்களுக்குத் தெரியப்படுத்தவிருக்கின்றோம். அதற்காகப் பொலிசார் மீது மக்களுக்குப் பெருமளவு நம்பிக்கை உள்ளதாகக் கொள்ளக்கூடாது. தமிழ் மக்கள் மத்தியில் பாதுகாப்புப் படைகள் மீது பரந்தளவில் அவநம்பிக்கையும் பயமும் இருப்பது போலவே பொலிசார் மீதும் அவநம்பிக்கை உண்டு. ஆகவே இப்பொழுதிருந்தே மக்கள் தம்மை தேர்தல்களுக்குத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசாங்க சார்புக் கட்சிகளுக்கு வாக்கிடுவதால் தமிழ் மக்களின் வருங்காலம் பிரகாசமடையாது. அரசாங்க சார்புக் கட்சிகள் எனும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனுள் அடங்கும். மாறாக மேலும் மேலும் தமிழ் மக்கள் வாழ்க்கை சிங்கள ஆதிக்கத்தினுள் அமிழ்ந்துவிடும்.

கடந்த நான்கரை வருடங்களாக நல்லாட்சி என்ற பெயரில் உருவான அரசாங்கத்துடன் இணக்க அரசியலைச் செய்து வந்த கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எந்த விதமான பலமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் காலத்தைக் கடத்திவிட்டு தற்போதைய தேர்தல்க் காலத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதும் கண்துடைப்பு வேலைகளையே செய்து வருகின்றார்கள். இவர்கள் நினைத்திருந்தால் பாராளுமன்றத்தில் இருந்து பேரம் பேசவேண்டிய நேரத்தில் பேரம் பேசி எங்கள் அரசியற் கைதிகளை விடுவித்திருக்கலாம். அத்துடன் தற்போதும் கூட தொடர்ந்துவரும் அரசாங்கங்கள் தமிழ் அரசியற் கைதிகளைப் பணயக் கைதிகளாகவே வைத்துக் கொண்டு வருகின்றன. சிங்களப் போர்க் குற்றவாளிகளைக் கைதில் இருந்து தப்ப வைக்க, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் நடைபெறாதிருக்க, மேற்படி தமிழ் அரசியற் கைதிகளைப் பணையமாகப் பாவிக்கவே அவர்களைத் தொடர்ந்தும் சிறையில் வாட வைத்திருக்கின்றார்கள். ஆகவே நாம் தேர்நதெடுக்கப்பட்டால் சட்ட ரீதியாக கட்டமைப்புக்களை உருவாக்கி செய்யக்கூடிய எல்லா வழிமுறைகளையும் நாம் பரிசீலித்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

அதேசமயம் ஜனாதிபதியுடன் இவர்களின் விடுதலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவோம். முக்கியமாக தெரிவுசெய்யப்படும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐ. நா, சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், இந்திய அரசு ஆகியவற்றுடன் இது விடயத்தில் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தி அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்போம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் வகையில் கடந்த 11 வருடங்களாக அவர்களின் உறவுகள் போராடிவருகின்றனர். அவர்களையும் உள்ளடக்கிப் போராட்டங்களை நிலத்திலும் புலத்திலும் விரிவுபடுத்தி போராட்ட வடிவங்களையும் விரிவுபடுத்தி செயற்படுவோம். போராடும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை அறிந்து, நிறைவேற்றக்கூடிய தேவைகளை புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என்றார்.