2001 புலிகள் எம்மை அழைத்து பேசினார்கள் கொள்கையில் இணைந்து கூட்டமைப்பானது! நிலைமையை தெளிவுபடுத்தினார் மாவை

2001ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் எம்மை அழைத்துப் பேசினார்கள். தமிழ் அரசியல் தரப்புக்களிடையே கடந்த காலத்தினைப்போன்று வலிமையான கூட்டமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள். அதனடிப்படையில் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டுக்கொண்டிருந்த கொள்கை ரீதியில் ஒன்றிணைந்து செல்லக்கூடிய கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

 

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழினம் தனது தாயகத்தில் அபிலாஷைகளைப் பெற்று தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காக தங்களின் உயிரைக்கூட துச்சமாக கருதி ஆயுதங்களை ஏந்திப் போராடியவர்கள். இனத்திற்காக தம்மையே அர்ப்பணித்தவர்கள்.

அவர்களின் தியாகங்களும், அர்ப்பணிப்புக்களுக்கும் எவற்றுக்குமே ஈடாகாது. வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை ஆயுத ரீதியாக பெற்றுக்கொள்வதற்கு கடும் பிரயத்தனம் செய்திருந்தார்கள். ஈற்றில் மூன்று தசாப்தங்களில் அவர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டுவிட்டது. ஆனால் விடுதலைக்கான பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.

தற்போது கூட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் எம்முடன் இணைந்து பணியாற்றுகின்றார்கள். எமது கட்சியில் பங்கேற்று செயற்படுகின்றார்கள். அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்து பயணிக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.

இதனைவிடவும் அவர்களின் வாழ்வாதார நிலைமைகள் மேம்படுவதற்காக அதிகளவான பிரயத்தனங்களைச் செய்து வருகின்றோம். எமக்காக போராடியவர்களுக்காக நாம் நம்பிக்கையளிக்கும் வகையிலான செயற்பாடுகளை முழுமையாக முன்னெடுத்து வருகின்றோம்.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் தொடர்பில் முன்னுக்குப் பின்னர் முரணான கருத்துக்கள் சொல்லப்படுகின்ற நிலையில் கூட்டமைப்பின் தாய்க்கட்சித் தலைவர் என்றவகையில் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு யார் காரணம்?

பதில்:- தமிழின விடுதலைக்கான பயணத்தில் செயற்பட்டிருந்த அனைத்து தரப்பினரும் தமிகழத்திலிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் கலந்துரையாடல்களை செய்வதுண்டு. இதில் தமிழ் அரசியல் தலைவர்கள், போராட்ட இயக்கங்களின் பிரதிநிதிகள் என்று அனைவரும் பங்கேற்பார்கள். அவ்வாறான கூட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. அவ்வாறான நிலையில் தான் 2001ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் எம்மை அழைத்துப் பேசினார்கள்.

தமிழ் அரசியல் தரப்புக்களிடையே கடந்த காலத்தினைப்போன்று வலிமையான கூட்டமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள். அதனடிப்படையில் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டுக்கொண்டிருந்த கொள்கை ரீதியில் ஒன்றிணைந்து செல்லக்கூடிய கட்சிகள் ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது தமிழரசுக்கட்சியை தாய்க்கட்சியாக செயற்படுவதற்கும் வீட்டுச்சின்னத்தை பொதுச்சின்னமாக பயன்படுத்துவதற்கான அங்கீகாரம் வழங்குவதற்கு முன்னதாக விடுதலைப்புலிகளின் தலைமை உங்களுடன் தனிப்பட்ட முறையில் பேசியதாக கூறப்படுகின்றதே?

பதில்:- நாங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருக்கின்றபோது விடுதலை இயக்கங்களுடன் பரஸ்பர பேச்சுக்களை நடத்தியிருக்கின்றோம். பிரபாகரன், சிறிசபாரட்ணம், உமாமகேஸ்வரன், பத்மநாபா போன்றவர்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடியிருக்கின்றோம். 1983களில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததிலிருந்து ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் வரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. கருத்துக்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டிருக்கின்றோம்.

அந்தவகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது எமக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அச்சமயத்தில் கூட்டமைப்பின் சின்னம் தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டன. அனைத்து தலைவர்களின் முன்னிலையில் தான் மறைந்த அப்பாத்துரை விநாயாகமூர்த்தி தமது கட்சியின் சின்னத்தினை வழங்க மறுக்கவும் தமிழரசுக்கட்சியும் சின்னமும் முன்மொழியப்பட்டது.

அப்போது அனைத்து தரப்பினரும் அதனை ஏற்றுக்கொண்டிருந்தனர். விடுதலைப்புலிகள் தரப்பிலும் ஏற்றுக்கொண்டனர். இந்தவிடயத்தில் பிரபாகரனுடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் எதனையும் நான் முன்னெடுத்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.