Oktober 8, 2024

புலம்பெயர் புலிகள் அமைப்புடன் தொடர்பில்லை! சுமந்திரன்

விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் மு்னனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

கேள்வி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சுமந்திரனுக்கு தானே புலம் பெயர் புலிகளுடன் அதிகமான தொடர்புகள் உள்ளன?.

பதில் – புலம்பெயர் புலிகளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.

கேள்வி – ருத்ரகுமாரனுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு எப்படியானது.

பதில் – அவருடன் தொடர்புகள் இல்லை.

கேள்வி – தொலைபேசி தொடர்புகள்

பதில் – ஓரிரு தடைகள் தொலைபேசியில் பேசி இருக்கின்றோம் தொடர்புகள் இல்லை. ஆனால் புலம் பெயர் அமைப்புகள் சிலவற்றுடன் எனக்கு தொடர்புகள் இருக்கின்றன. GTF, BTF, CTC, ATC ஆகியவற்றுடன் தொடர்புகள் உள்ளன. (என 9.00 நிமிடத்திற்கு பின் வரும் வீடியோ பகுதியில் இதைக் குறிப்பிடுகின்றார்) அந்த அமைப்புகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பணியாற்றும் அமைப்புகள்.

கேள்வி – ருத்ரகுமாரனுடன் எப்போது பேசினீர்கள் நினைவில் உள்ளதா?.

பதில் – நினைவில் இல்லை. 2016 அல்லது 2017 ஆம் ஆண்டு என்னுடன் ருத்ரகுமாரன் தொலைபேசி தொடர்புக்கொண்டு கலிப்போர்னியாவில் உள்ள அவர்களின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுமாறு கூறினார். நான் அதனை மறுத்து விட்டேன்.

கேள்வி – ருத்ரகுமாரன் என்பவர் இலங்கைக்கு வெளியில் தனிநாடு தொடர்பான அமைப்புடன் தொடர்புடையவர் அவர் போன்ற நபருடன் ஏன் தொடர்புகளை வைத்துக்கொள்கிறீர்கள்?.

பதில் – தொடர்புகள் இல்லை. அவர் தமது நாடாளுமன்றத்தில் கலந்துக்கொள்ளுமாறு கோருகிறார். முடியாது என்ற பதில் அனுப்பினேன் அது மாத்திரம்தான்.

கேள்வி – புலம்பெயர் புலிகளின் நிதி, உங்கள் ஊடாகதானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வருகின்றது. நீங்கள்தானே நடுவில் இருக்கும் முகவர்?.

பதில் – இல்லை. வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமது குடும்பங்களுக்கு பணம் அனுப்புகின்றனர். வருமான வசதிகள் இல்லாதவர்கள், வெளிநாடுகளில் இருந்து உறவினர்கள் அனுப்பும் பணத்திலேயே வாழ்கின்றனர். இதனை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிதி தொடர்பான தொடர்புகள் இல்லை.

கேள்வி – நீங்கள் தனிநாடு , பிரிவினைவாத கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் நபரா?.

பதில் – எப்போதும் இல்லை.

கேள்வி – ஐக்கியமாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறீர்களா?.

பதில் – ஐக்கியமாக இருக்க வேண்டும். எனினும் அனைத்து இனங்களுக்கும் அரச அதிகாரங்களை கையாளும் அதிகாரம் இருக்க வேண்டும்.

கேள்வி – அப்படியானால், ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டியை கோருகிறது.

பதில் – சமஷ்டியைதான் நாங்கள் கோருகிறோம். சமஷ்டி மூலமே அனைத்து இன மக்களுக்கு அரச அதிகாரங்களை பயன்படுத்த முடியும்.

கேள்வி – அப்படியானால் அது தனி நாடு.

பதில் – இல்லை. சமஷ்டி என்பது தனி நாடு அல்ல.

கேள்வி – சமஷ்டி என்றால் நாடு பிளவுப்பட்டு விடும்

பதில் – அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, பல ஐரோப்பிய நாடுளில் சமஷ்டி முறையே இருக்கின்றது. அவற்றை நாங்கள் தனி நாடுகள் என்று எப்போதும் கூறுவதில்லை. அவை வலுவான நாடுகள். சமஷ்டி இருப்பதன் காரணமாகவே அந்நாடுகள் வலுவான நாடுகளாக இருக்கின்றன.

கேள்வி – நீங்கள் இந்த நாட்டின் தேசிய கொடியை ஏற்றுக்கொள்கிறீர்களா?.

பதில் – ஆம் அது தற்போது எங்களது தேசிய கொடி அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

கேள்வி – தேசிய கீதம்

பதில் – ஆம் தேசிய கீதத்தை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் தேசிய கொடியை ஏற்றுகிறோம். நானும் சம்பந்தனும் மாத்திரமே அதனை செய்கிறோம்.

கேள்வி – யாழ்ப்பாணத்தில் சிலர் தேசிய கொடியை உயர்த்துவதில்லை.

பதில் – வரலாற்றை நோக்கி பார்க்க வேண்டும். 1972 ஆம் ஆண்டு முதலாவது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது எம்மை வெளியில் வைத்து விட்டு அதனை உருவாக்கினர். தமிழ் மக்களை இணைத்துக்கொள்ளாது அவர்களின் யோசனைகளை பெறாது, தமிழ் மக்களை தேசிய ரீதியில் ஒதுக்கி விட்டு, அதனை உருவாக்கினர். இதன் பின்னரே 74, 76 ஆம் ஆண்டுகளில் தனி நாடு வேண்டும் என்ற குரல் எழுப்பபட்டது. அப்போது நிராகரித்த தேசிய கொடியை நாம் எப்படி தற்போது ஏந்துவது என்ற பிரச்சினை சிலருக்கு உள்ளது. எனக்கு அந்த பிரச்சினையில்லை.

கேள்வி – நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை ஏற்றுக்கொள்பவரா?.

பதில்- இல்லை. ஏற்றுக்கொள்பவன் அல்ல.

கேள்வி – எந்த வகையிலும் ஏற்றுக்கொள்வதில்லை.

பதில் – ஆம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்வதில்லை. இதனை நான் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல அனைத்து இடங்களிலும் கூறுகிறேன். இதன் காரணமாக எனக்கு கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. எங்களுக்காக போராடியவர்களை ஏன் ஏற்றுக்கொள்வதில்லை என கேட்கின்றனர். ஆயுத அமைப்பை எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதால், புலிகளின் ஆயுத அமைப்பை ஏற்கவில்லை எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.