September 9, 2024

முன்னாள் போராளியை கடத்த அலையும் ஆமி!

யாழ்.நாகர்கோவில் பகுதியில் உள்ள வீட்டின்னுள் புகுந்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் வயோதிப பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.இதனிடையே மக்கள் திரண்டதையடுத்து படையினர் தப்பியோடிய நிலையில் வீட்டு வளவினுள் இருந்து இராணுவத்தின் தொப்பி, கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த தைப் பொங்கல் தினத்தன்று வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் தர்க்கம் உருவானது. இதனைத் தொடர்ந்து பல சுற்றிவளைப்புக்கள் நடாத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
எனினும் தைப் பொங்கல் தினத்தில் இராணுவத்தினருடன் முறுகலில் ஈடுபட்டதாக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த முன்னாள் போராளியான இளைஞன் ஒருவனை படையினர் தொடர்ச்சியாக தேடிவரும் நிலையில், பொலிஸார் நீதிமன்றில் அவ்வாறு ஒரு சந்தேகமான இளைஞனே இல்லை. அவ்வாறு ஒருவனை தேடவில்லை.என கூறியிருக்கின்ற நிலையில் நேற்று நள்ளிரவும் குறித்த இளைஞனின் வீட்டுக்குள் படையினர் நுழைந்துள்ளனர்.
எனினும் இளைஞன் வீட்டில் இல்லாத நிலையில் வீட்டில் இருந்தவர்களை மோசமாக அச்சுறுத்தியுள்ளதுடன், தாக்குதலும் நடாத்தியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.