ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவைப் பெற முடியுமா? வெளிநாட்டினருக்கு கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடி!

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள பல வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிகமாக புலம்பெயர்ந்தவர்கள்
ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க விண்ணப்பிப்பதற்கான ஆங்கிலத் தேர்வுகளை எழுதுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் பணியாற்றுவதற்கான அபிமன்யூ சிங்கின் நீண்ட கால விசா மே 18ம் தேதியுடன் நிறைவடையிருக்கும் நிலையில், விசா காலம் நிறைவடையும் முன்னர் நிரந்தர விசாவுக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டிருக்கிறார்.

ஆனால், நிரந்தர விசாவுக்கு விண்ணப்பிக்க ஆங்கிலத் தேர்வின் முடிவுகளை விசா விண்ணப்பத்துடன் ‘அபிமன்யூ’ சமர்பிக்க வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள இச்சூழலில், PTE (Pearson Test of English) தேர்வு ரத்தாகியுள்ளது. அதே போல், இவரின் IELTS (International English Language Testing System) தேர்வும் மே 16க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இவரைப் போல் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க நினைக்கும் பல வெளிநாட்டினர் விசாவுக்கான தேவைகளை பூர்த்திச் செய்வதில் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

தேர்விற்கான தேதிகள் ஒதுக்கப்படாததால் ஆஸ்திரேலியாவில் பல வெளிநாட்டு மாணவர்கள், நிரந்தர விசாவுக்கு திட்டமிட்டிருப்பவர்கள் கண்டுகொள்ளப்படாதவர்களாக இருப்பதாகக் கூறுகிறார் புலம்பெயர்வு முகவரான கமல்தீப் சிங்.

“ஆங்கில மொழி சோதனை பெரும்பாலான விசாக்களுக்கு முன்நிபந்தனையாக உள்ள நிலையில், வரும் நாட்களில் விசா தாமதத்திற்கு இது முக்கிய காரணமாக இருக்கக்கூடும்,” என கமல்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக IELTS தேர்வு ஒருங்கிணைப்பாளரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், சமூக இடைவெளி தேவைகள் காரணமாக சில மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் அதே சமயம் மற்ற தலைநகரங்களிலும் தேர்வு நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரனமாக தேர்வு எழுதுவதில் சிக்கல் உள்ளமை குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அறிந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆங்கிலத் தேர்வில் கலந்து கொள்ள முடியாத பட்சத்தில், அவர்களுக்கு தேர்வு எழுத மேலும் கால அவசாசம் வழங்கப்படும் என ஆஸ்திரேலிய உள்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.