Oktober 7, 2024

மாணவர்களை தனிமைப்படுத்துவதற்காக பல்கலைக்கழக விடுதிகளை பயன்படுத்த தீர்மானம்! அமைச்சர் பந்துல குணவர்தன

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் மாணவர்களை தனிமைப்படுத்துவதற்காக பல்கலைக்கழக விடுதிகளை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் பல்கலைக்கழக அதிகாரிகளும் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சரவை கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தொடர்பாக யோசனைகளை முன்வைத்தார்.

இதன்படி தற்போது வெளிநாடுகளுக்கு சென்றிருந்த மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சார்க் நாடுகளில் கற்கும் மாணவர்களும் பின்னர் மற்றைய நாடுகளில் கல்வி மற்றும் பட்டப் படிப்பிற்காக சென்றுள்ளவர்களை அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவர்கள் நாடு திரும்பியதும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர். இதன்படி பலர் கட்டணம் செலுத்தி தமது சுய விருப்பில் ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தலில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் எல்லா மாணவர்களுக்கும் பணம் செலுத்தி ஹோட்டல் அறைகளில் தங்க முடியாது. இதனால் பணம் செலுத்த முடியாதவர்களுக்காக பல்கலைக்கழக விடுதிகளின் இடத்தை வழங்குவதற்கு மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழ அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை அடுத்தக்கட்டமாக தொழிலுக்காக சென்றுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும். குறிப்பாக மாலைதீவு, டுபாய், குவைட் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அழைத்துவருவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும். என்றார்.