Oktober 8, 2024

கூட்டமைப்புக்கு மஹிந்தருடன் கள்ள உறவு?

மஹிந்த அரசுடன் கள்ள ஒப்பந்தத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தயாராகி விட்டதா? என ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (5) யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அனந்தி சசிதரன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அனந்தி சசிதரன் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்பும் இதே மஹிந்த ராஜபக்சவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தது.

அந்த 22 சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாத நிலையில், முதலில் போவதுக்கு மறுத்தவர்கள். ஆனால் நேற்று முன் தினம் 11 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று சந்தித்திருக்கின்றார்கள்.

அது மாத்திரமின்றி கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாத நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரையாற்றுவதற்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

பின்னர் தமது கோரிக்கைகள் என்று குறிப்பிடப்பட்ட ஒரு கோப்பினை பிரதமரிடம் வழங்கிய காட்சியையும் கானமுடிந்தது.

வழங்கப்பட்ட கோப்பில் அடங்கிய விடையம் என்ன என்பது இன்று வரை மக்களுக்கு தெரியாததாகவே இருக்கின்றது.

2014ம் ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐய வழங்கிய கடிதத்தை சுமந்திரன் வழங்கிய நிலையில், அந்த கடிதத்தில் என்ன இருக்கின்றது என நாங்கள் அப்போது கேட்டும் இன்றுவரை என்ன இருக்கின்றது என்றே தெரியாமல் இருக்கின்றது.

அது அவ்வாறு இருக்க நேற்று வழங்கப்பட்ட கடிதத்தில் அரசியல் கைதிகளுடைய விடுதலை, புதிய அரசியல் யாப்பு போன்ற விடையங்கள் உள்ளடங்கியுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நல்லாட்சி அரசாங்கம் என முண்டுகொடுத்து ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய வக்கில்லாத கூட்டமைப்பு இப்போது 5 வருடங்கள் கடந்து மீன்டும் தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பாக பேசுகின்றார்கள்.

இப்போது எங்கள் மத்தியில் எழுகின்ற சந்தேகம் இவர்கள் இந்த அரசுடன் கள்ள ஒப்பந்தத்திற்கு தயாராகி விட்டார்களா ? அதுவும் கொரோனா நெருக்குவாரத்தில் தேர்தலை நடத்துவதற்கு கூட்டமைப்பினுடைய அனுசரனை அரசுக்கு தேவையாக உள்ளது. அரசினுடைய சலுகைகளும், வசதி வாய்ப்புகளும் கூட்டமைப்புக்கு தேவையாக இருக்கின்றது என்ற வகையில் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டு விட்டார்களா என வலுவான சந்தேகம் ஒன்று எழுகின்றது. – என்றார்.