September 11, 2024

யாழில் பொலிஸாருக்கு எதிராக குவியும் முறைப்பாடுகள்

யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் 20ம் திகதியிலிருந்து மே முதலாம் திகதிவரையாக காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் நேற்று (1) இதுகுறித்து தெரிவிக்கையில்,
கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து மே முதலாம் திகதிவரை 16 முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
அவற்றில் 9 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிரானவை. கோப்பாய், சாவகச்சேரி, வட்டுக்கோட்டை மற்றும் பருத்தித்துறை பொலிஸாருக்கு எதிராகவே முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அத்தோடு, இராணுவத்துக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவை ஆனையிறவு இராணுவ சோதனைச் சாவடி படையினர் தொடர்பாகவும் மற்றையது பூநகரி பகுதியில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியமை தொடர்பாகவும் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஏனைய முறைப்பாடுகள் சமுர்த்தி நிவாரணம் வழங்கல் தொடர்பாக அதிகாரிகள் மீதான முறைப்பாடுகள் பொதுமக்களால் பதியப்பட்டிருக்கின்றன.
பொலிஸாருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அந்தந்த பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளன – என அவர் மேலும் தெரிவித்தார்.