September 10, 2024

தென்கொரியா-வடகொரியா எல்லையில் பதற்றம்! நடந்தது என்ன ??

தென்கொரியா-வடகொரியா எல்லையில் பதற்றம்! நடந்தது என்ன ??

கொரிய நாடுகளை பிரிக்கும் இராணுவ மயப்படுத்தப்படாத வலயத்தில் இரண்டு நாட்டு படையினருக்கும் இடையில் பரஸ்பரம் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

வடகொரிய தரப்பில் இருந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் தமது நாட்டு பாதுகாப்பு அரண் தாக்கப்பட்டுள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவிலிருந்து அந்நாட்டு நேரப்படி காலை 7:41 மணியளவில் தென் கொரியாவை நோக்கி பல துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாக தெற்கின் கூட்டுத் தலைவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வடகொரிய தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதுடன், எச்சரிக்கை அறிவிப்பும் விடுக்கப்பட்டதாக தென்கொரியா கூறியுள்ளது.

எனினும் தமது தரப்பில் எந்தவொருவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தென்கொரிய இராணுவம் கூறியுள்ளது.

உலகில் அதிகளவு இராணுவ மயமாக்கப்பட்ட பகுதிகளாக கொரிய எல்லைகள் காணப்படுவதுடன், இவ்வாறான சம்பவங்கள் மிக அரிதாகவே இடம்பெறுகின்றன.

இறுதியாக 2017 ஆம் ஆண்டு இவ்வாறான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. எனினும் எந்த காரணத்திற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்ற விடயம் தெரியவரவில்லை.

வடகொரிய தரப்பில் வழமைக்கு மாறான இராணுவ நடமாட்டம் இருக்கவில்லை என தென்கொரிய இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போதைய தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது தற்செயலாக இடம்பெற்ற விபத்தா என்பதை ஆராய்ந்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.