ஜேர்மனியில் அதிகரித்து வரும் கொரோனா… மீண்டும் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி!

ஜேர்மனியில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதற்கு மத்தியில் நாட்டில் உள்ள வழிபாட்டு தலங்களை மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

ஜேர்மனியில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 793 அதிகரித்து மொத்தமாக 1,62,496 ஆக உயர்ந்துள்ளது என ஞாயிற்றுக்கிழமை வெளியான தொற்று நோய்களுக்கான ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் தரவுகள் காட்டின.

இறந்தவர்களின் எண்ணிக்கை 74 அதிகரித்து 6,649 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜேர்மனியில் உள்ள தேவாலயங்கள் இப்போது மீண்டும் வழிபாட்டாளர்களுக்கு திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளுடன் பல வார பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைத் தடுக்க மதத் தலைவர்கள் கடுமையான விதிகளை கொண்டு வந்துள்ளனர்.

தேவாலயங்கள் கலந்துகொள்ளும் வழிபாட்டாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தப்படும், மேலும் மக்கள் குறைந்தது 2 மீற்றர் தூர இடைவெளியில் இருக்க வேண்டும்.

பாடல் பாடுவதின் மூலம் வைரஸை பரவலாம் என்று அதிகாரிகள் கூறுவதால் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் பாதிரியார்கள் முகமூடி அணிய வேண்டியிருக்கும்.

யூத மற்றும் முஸ்லீம் தலைவர்களும் ஜெப ஆலயங்கள் மற்றும் மசூதிகளுக்கு சிறப்பு சுகாதார விதிகளை அறிமுகப்படுத்துகின்றனர்.

மதத் தலைவர்கள் மார்ச் மாதத்தில் அரசாங்கத்தின் ஊரடங்கை ஆதரித்தனர். ஆனால் தற்போது கடைகளை திறக்கும் போது , ஏன் வழிபாட்டுத் தலங்களை திறக்கக்கூடாது என கேள்வி எழுப்பினர்.

வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதிக்கும் நடவடிக்கையை அவர்கள் வரவேற்றுள்ளனர். குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில், மக்களுக்கு அவர்களின் நம்பிக்கையின் ஆதரவும் ஆறுதலும் தேவை என யூதத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.