September 9, 2024

கல்வி நிலையங்களை கைவிடுக: சுரேஷ் க.பிறேமச்சந்திரன்

கொரோனா தொற்று உள்ளவர்கள் என சந்தேகிக்கப்படும் படையினரை வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையங்களில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவந்த செய்தியை அடுத்து அதனை கைவிடுமாறு  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ் க.பிறேமச்சந்திரன் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை வருமாறு:

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கி ஏறத்தாழ 50 நாட்கள் கடந்துவிட்டன. பல்வேறுபட்ட மாவட்டங்களில் தொடர் ஊரடங்குகளும் நடைமுறையில் இருந்து வருகிறது. இலங்கையின் பல பாகங்களிலும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்களை அல்லது அந்த நோய்த்தொற்றுள்ளவர்களுடன் தொடர்புடையவர்களை கண்காணிப்பதற்காக தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் பல்வேறுபட்ட இராணுவ முகாம்களும் கடற்படை முகாம்களும் விமானத் தளங்களும் இத்தகைய தனிமைப்படுத்தல் முகாம்களாக மாற்றியமைக்கப்பட்டிருந்தன. இவ்வாறான முகாம்களில் மிகப்பெருமளவில் கொரோனா வைரஸ் தாக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையில் பல நூற்றுக்கணக்கானவர்கள் தென்பகுதியிலிருந்து அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப் பட்டிருந்தனர். அது மட்டுமன்றி, வெளிநாடுகளிலிருந்து இலங்கையை வந்தடைந்த பிரயாணிகளுக்கும் இத்தகைய தொற்றுக்கள் உள்ளனவா என்பதை அவதானிப்பதற்காக அவர்களும் இங்கே கொண்டுவரப்பட்டனர்.இவ்வாறான முகாம்களை வடக்கிலோ கிழக்கிலோ ஏனைய மாகாணங்களிலோ அமைக்கும்; போது படையினர் எடுத்த முடிவா? துறைசார் வைத்திய  நிபுணர்கள் எடுத்த முடிவா? என்ற கேள்வி எழுகின்றது. தென் பகுதியில் இருந்து கொரனோ வைரஸ்சுடன்  தொடர்புடைய எத்தனைபேர் வடபகுதிக்கு கொண்டு வரப்படுகிறார்கள் எந்தெந்த முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள், இவர்களது சுகாதாரப்பராமரிப்புக்கள் யாரால் மேற்கொள்ளப்படுகின்றது, என்ற எந்தவொரு விடயமும் வடமாகாண ஆளுநருக்கோ, அரச அதிபர்களுக்கோ, வடமாகாண சுகாதார செயலாளருக்கோ, பணிப்பாளர்களுக்கோ தெரியாத நிலை தான் இருக்கின்றது. இவ்வாறான சகல விடயங்களும் கொழும்பில் இருந்தே நெறிப்படுத்தப்படுவதாகவும் வெளிப்படைத்தன்மைகள் அற்றனவாகவும் தோன்றுகின்றது.

கொரோனா தொற்று என்பது ஒரு உலகளாவிய கொள்ளை நோய் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நோய்க்கான மருந்தும் தடுப்பு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நோய் மனிதர்களினூடாக மிகப்பெரிய அளவில் தொற்றுவதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே ஊரடங்குச் சட்டங்கள் அமுல்படுத்தலும், சமூக இடைவெளியைப் பேணுமாறு கோருவதும், தனிமையில் இருக்குமாறு கோருவதும் போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற அரசாங்கம் மாவட்டம் விட்டு மாவட்டம,; அல்லது நீண்ட தூரங்களிலிருந்து கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்களாக சந்தேகிக்கின்றவர்களை அழைத்து வந்து வேறு மாவட்ட முகாம்களில் தங்கவைத்திருப்பது சரியான செயற்பாடா என்ற பாரிய கேள்வி எழுகின்றது.

இப்பொழுது கொரோனா நோய் அடையாளம் காணப்பட்டதன் காரணமாக ஒருசில இராணுவ, முகாம்களும் கடற்படை முகாம்களும் மூடப்பட்டிருப்பதாக அறிகின்றோம். அதனால் கொரோனா தொற்றுக்குள்ளான படையினரைத் தனிமைப்படுத்தி வைத்திருக்க இப்பொழுது புதிய முகாம்களை படையினர் தேடி வருவதைப் பார்க்க முடிகின்றது. கோப்பாய் கல்வியியல் கல்லூரி, வவுனியா மத்திய மகாவித்தியாலயம், கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயம் போன்ற பல பாடசாலைகள் படையினரைத் தனிமைப்படுத்தும் முகாம்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று தென்னிலங்கையிலும் ஒரு சில பாடசாலைகளை கையகப்படுத்தியிருக்கலாம். ஆனால் இத்தகைய கல்வியியல் கல்லூரிகளும் பாடசாலைகளும் மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் உருவாக்கப்படுவதை அப்பிரதேச மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அரசின் இந்நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்கள் தெளிவாகக் காட்டுகின்றது. ஒரு பக்கத்தில் பாடசாலைகளையும் கல்விக்கூடங்களையும் தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்றுவதற்கு பொலிசார் ஊடாகவும் இராணுவத்தினர்; ஊடாகவும் நடவடிக்கை எடுக்கும் அதே நேரம் நாங்கள் பாடசாலைகளையோ கல்விக்கூடங்களையோ கையகப்படுத்த மாட்டோம் என அறிக்கை விடுவது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகவே உள்ளது. சில வாரங்களிலோ அல்லது சில மாதங்களிலோ கொரோனா தொற்று நீங்கினால் மாணவர்களோ ஆசிரியர்களோ, கல்வி திணைக்கள  அதிகாரிகளோ  இத்தகைய கல்வி நிலையங்களுக்குள் உள்நுழைவதற்கு அச்சத்தை ஏற்படுத்தும். என்னதான் அரசாங்கம் கிருமித்தொற்று நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆபத்து நீங்கிவிட்டது என்று அறிவித்தாலும் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்களின் அச்சம் நீங்குவது சந்தேகமே! ஆகவே இத்தகைய தனிமைப்படுத்தும் முகாம்களை மக்கள் நடமாட்டம் அற்ற பிரதேசங்களில் வைத்திருப்பதுதானே சிறப்பானதாக இருக்க முடியும்.

மாறாக, அரசின் இவ்வாறான முடிவுகள் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளின் பேரில் மேற்கொள்ளப்படுகின்றனவா அல்லது படையினரினால் தன்னிச்சையாகவே மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற கேள்வி எமக்கு எழுகிறது. ஆகவே பொலிசாரைக் குவித்து பதற்றமான சூழலை உருவாக்கி, இத்தகைய தனிமைப்படுத்தல் முகாம்களை அமைப்பதை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று கோருகின்றோம்.

கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில் இருந்து வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்களும் கொரோனா தொற்று அற்ற மாவட்டங்களாகவே இருந்தது. பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்த கொரனோ தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதுவும்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக யாழ்ப்hணத்திலும் கொரனோ தொற்றாளர்கள் என எவரும் இனங்காணப்படவில்லை. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மாகாணமானது கொரோனா அச்சத்திலிருந்து ஓரளவிற்கு விடுபட்டு மீளும் நிலைமை ஏற்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கத்தின் புதிய தனிமைப்படுத்தல் முகாம்களை ஆரம்பிக்கும் நடவடிக்கையானது, மீண்டும் வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று நுவரெலியா மாவட்டம் மற்றும் வேறு சில மாவட்டங்களும் கொரனா தொற்று ஏற்படாத மாவட்டங்களாக உள்ளன. எனவே இவ்வாறான மாவட்டங்களுக்கோ மாகாணங்களுக்கோ சென்று வருபவர்களை மாகாணத்தின் எல்லையிலோ மாவட்டத்தின் எல்லையிலோ பரிசோதனை செய்து அனுப்புவதனூடாக பகுதி பகுதியாக கொரனா தொற்று அற்ற பிரதேசங்களை உருவாக்க முடியும் என்பது எங்கள் கருத்து.

மாவட்ட ரீதியாகவோ மாகாண ரீதியாகவோ கொரோனா அற்ற மாவட்டங்களை இனங்கண்டு அந்த மாவட்டங்களின் இயல்பு வாழ்க்கையைக் கட்டியெழுப்புவது என்பது ஒரு சிறப்பான நடவடிக்கையாக இருக்கும். அதனை விடுத்து, கொரோனா அச்சம் குறைவடைந்து செல்லும் மாவட்டங்களில் மீண்டும் இத்தகைய தனிமைப்படுத்தும் முகாம்களைத் திறந்து நோய்த்தொற்றாளர்களைக் கொண்டுவந்து வைத்திருப்பதானது ஏற்புடையதுமல்ல,ஆரோக்கியமானதுமல்ல. கொரனா தொற்று நோயை அழிப்பதை வெறுமனே ஓர் இராணுவ நடவடிக்கை போன்று பார்க்காமல்   அரசாங்கம் அந்தந்த மாவட்டம் மற்றும் மாகாணங்களில் உள்ள  வைத்திய நிபுணர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்வதே உகந்ததாக இருக்கும்.

சுரேஷ் க.பிரேமச்சந்திரன்

தலைவர்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி