September 9, 2024

என்றோ ஒரு நாள் உலகம் உணர முடியும் !

என்றோ ஒரு நாள், தமிழ் மக்களின் சுயாட்சிக்கான அவரது போராட்டத்தை உலகம் உணர முடியும் என்று நம்புகிறோம் என தராக்கியின் பிள்ளைகளான வைஷ்ணவி சிவராம், வைதேகி சிவராம், அன்ட்ரூ சேரலாதன் தர்மரட்னம் ஆகியோர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த தந்தையின் 15ம் ஆண்டு நினைவஞ்சலியில் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு எங்கள் தந்தையின் மரணத்தின் பதினைந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது, இன்றுவரை, அவரது கொலைக்காக யாரும் தண்டிக்கப்படவில்லை. இதைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்படவில்லை, எங்கள் குடும்பம் அவர்களிடம் இருந்து எந்த நீதியையும் எதிர்பார்க்கவில்லை. இலங்கை அரசு தனது பிரச்சாரத்திற்கு எதிராக உண்மை நிலைமைகளை எழுதும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது.
இலங்கையில் காணாமல் போன, தாக்கப்பட்ட அல்லது கொலை செய்யப்பட்ட பல ஊடகவியலாளர்கள் குறித்த பொறுப்புக்கூறல் பற்றிய கவனக்குறைவு இன்றுவரை இலங்கையில் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
கொலை செய்யப்பட்ட எங்களது தந்தையின் உடல் இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே காணப்பட்டதென்பது இலங்கையில் ஊடக சுதந்திரத்தின் நிலை மற்றும் இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு உடன்படாத ஒருவரை மௌனிக்க வைக்க இலங்கை அரசு எந்த அளவிற்கு செல்லும் என்பது பற்றிய ஒரு தெளிவான நினைவூட்டலாகும்.
உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் காணாமல் போன தங்களது அன்புக்குரியவர்களைப் பற்றித் தொடர்ந்து பதில்களைத் தேடும் பலரைப் போலல்லாமல்; எங்கள் தந்தையின் உடலை மீட்டெடுக்க முடிந்தமைக்கும், மேலும் சில உண்மைகளை அறிய முடிந்தமைக்குமாக நாங்கள் நன்றியுள்ளவர்கள்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் போராட்டத்தைப் பற்றி விவாதிக்காமல் எங்கள் தந்தையைப் பற்றிப் பேசுவதென்பது கடினமானதும், சாத்தியமற்றதுமானதும் என்பதை நாங்கள் உணர்கிறோம். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு இளைஞனாக, இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளால் எங்கள் தந்தை பெரிதும் துயரப்பட்டார்.
இதன் விளைவாக, அவர் தனது கல்வியை நிறுத்த முடிவுசெய்து, இலங்கை அரசால் கட்டமைப்பு ரீதியாக ஒடுக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் தனது வாழ்க்கையையும் எழுத்துக்களையும் இந்த நோக்கங்களுக்காக அர்ப்பணித்தார்.
முள்ளிவாய்க்கால் படுகொலையில் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முடிவடைந்த வழியைக் காண அவர் வாழ்ந்திருந்தால் அவர் எவ்வளவு சிதைந்திருப்பார் என்பதையும் அவரது பிள்ளைகளாகிய நாங்கள் அடிக்கடி சிந்தித்துப் பார்க்கின்றோம். இலங்கை அரசால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு எதிராக அங்கு நிகழ்த்தப்பட்ட கொடூரமான அட்டூழியங்கள் அவரை உடைத்துப் போட்டிருக்கும்.
அதனால்தான், எங்கள் தந்தைக்கு மரியாதை செலுத்துவது மட்டுமல்லாமல், போரின்போது உயிரிழந்த அனைவரையும், குறிப்பாக முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூர வேண்டிய அவசியத்தையும் நாங்கள் உணர்கிறோம்.
இந்த நேரத்தில் கொலையுண்ட எங்களது தந்தைக்கான நீதி என்பது முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்பதே ஆகும். ஆயுத மோதலின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த தமிழ் இளைஞர்கள் குறித்த நீதியும், பொறுப்புக்கூறலும் அந்த இளைஞர்கள் மீது அன்பு வைத்துள்ள அவர்களது குடும்பங்களுக்குத் தேவையானது.
இடம்பெயர்வுகளில் தொடர்ந்து வாழும் குடும்பங்களுக்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலங்கை அரசின் ஒடுக்குமுறையின் கீழ் வாழும் அனைவருக்கும் முறையான நீதி தேவையானதாகும்.
எங்களைப் பாதுகாத்து, எங்களுக்கு அடைக்கலம் தந்ததோடு மேலும் சிறப்பான வாழ்க்கையை எங்களுக்கு வழங்கிய மிகவும் அன்பான தந்தையாக எங்களது தந்தையை அவரது குழந்தைகளாகிய நாம் நினைவில் கொள்கிறோம்.
அவர் வாழ்ந்த காலத்தில் தனக்குத் தெரிய வந்த போதெல்லாம் பொருளாதார ரீதியாக சிரமப்படும் மாணவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார். இருப்பினும், அவரது குடும்பத்தை விடவும், உதவி தேவைப்படுபவர்களை ஆதரிப்பதும், தனது எழுத்தின் மூலம் தனது தமிழ் மக்களின் இறையாண்மையைக் காப்பதும் அவரது மிக உயர்ந்த குறிக்கோளாக இருந்தது. பல உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட பின்னரும் அவர் வெளிநாடு செல்ல மறுத்து, தனது பணியும், சேவையும் இலங்கையில் இருப்பதாகவே உறுதியாக வாதிட்டார்.
இவற்றையெல்லாம் திரும்பிப் பார்க்கும்போது, அப்பா தான் மிகவும் ஆழமாக நேசித்ததைச் செய்து அதற்காகத் தனது உயிரைக் கொடுத்தார் என்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். என்றோ ஒரு நாள், தமிழ் மக்களின் சுயாட்சிக்கான அவரது போராட்டத்தை உலகம் உணர முடியும் என்று நம்புகிறோம்