April 12, 2024

வட்டியும் முதலும் – 40

வட்டியும் முதலும்

வட்டியும் முதலும்

ஒவ்வோர் ஆணின் மனதிலும் ஒளிந் திருக்கும் விஷக் கொடுக்குதான் இதை எல்லாம் செய்கிறது இல்லையா?

நேற்று இரவு ‚சதயம்’ படம் பார்த்தேன்!

இது எத்தனையாவது முறை எனக் கணக்கில்லை. சிபி மலயில் இயக்கிய அற்புதமான படம். படத்தில் மோகன்லால் ஓர் ஓவியர்.

வீட்டில் அவர் ஓவியம் வரைந்துகொண்டு இருக்கும்போது, எதிர் வீட்டில் இருந்து ஒரு குட்டிப் பெண் வந்து கேன்வாஸ் பின்னால் ஒளிந்துகொள்வாள். மோகன்லால் விசாரிக்கும்போது, தனது சித்தி தன்னை தவறான தொழிலில் ஈடுபடும்படி வற்புறுத்துவதாகக் கூறி அழுவாள். பின்னாலேயே அந்தப் பெண்ணைத் தேடி சித்தியும் ஒரு புரோக்கரும் வருவார்கள். அவர்களைத் திட்டி அனுப்பிவிட்டு, அந்தப் பெண்ணை தனது வீட்டிலேயே வைத்துக்கொள்வார் மோகன்லால். அவளை அவரே வளர்ப்பார். படிக்கவைப்பார். படித்து முடித்து அந்தப் பெண் ஒரு விளம்பர கம்பெனியில் சேர்வாள்.

அங்கே அந்த கம்பெனியின் எம்.டி-யோடு அவளுக்கு காதல் வரும். அது தெரிந்து மோகன்லால் அவளை எச்சரிப்பார். ஆனாலும் வயசு மயக்கத்தில் அவள் அந்தக் காதலில் தீவிரமாக இருப்பாள். ஒருகட்டத்தில் உறவெல்லாம் முடிந்த பிறகு, அந்த எம்.டி. அவளை விட்டுவிட்டுப் போய்விடுவான். ஏமாற்றமும் விரக்தியும் விரட்டியடிக்க அந்தப் பெண் எப்படியோ பாலியல் தொழிலுக்கே போய்விடுவாள். இது தெரிந்து மோகன்லால் வேதனையில் இருப்பார். ஒருநாள் அதே வீட்டில் அவர் ஓவியம் வரைந்துகொண்டு இருக்கும்போது, எதிர் வீட்டில் இருந்து இன்னொரு குட்டிப் பெண் வந்து ஒளிவாள். முன்பு வந்த பெண் ணின் தங்கை இவள். சித்தியைப் பற்றி அதே புகாரை இவளும் சொல்வாள். அவளை அணைத்து, கத்தியால் குத்திக் கொல்வார் மோகன்லால். கூடவே அவள் தங்கை, பின்னாலேயே வரும் புரோக்கர், அப்புறம் அந்த விளம்பர கம்பெனி எம்.டி. என அடுத்தடுத்து நான்கு கொலைகள். கோர்ட்டில் வழக்கு நடந்து லாலுக்கு தூக்குத் தண்டனை உறுதியாகும். அதன் பிறகு தூக்கில் இருந்து அவரைக் காப்பாற்றுவதற்கு முதலில் வந்த பெண் போராடு வதன் மேல் கதை போகும்.

படத்தில் விளம்பர கம்பெனி எம்.டி-யை அந்தப் பெண் காதலிப்பதாகக் கூறும்போது மோகன்லால் அவளிடம் ஒரு வசனம் சொல்வார்… “இதோ பார்… உனக்கு இப்போ புரியாது. ஒவ்வொரு ஆணிட மும் ஒரு விஷக் கொடுக்கு ஒளிஞ்சி ருக்கு!“ படம் பார்க்கும் ஒவ்வொரு முறையும் இந்த வசனம் என்னை மிகுந்த தொந்தரவுக்கு உள்ளாக்குகிறது. தூக்கத்தைக் கெடுக்கிறது. சிந்தனையைக் கலைத்துப்போடுகிறது!

வட்டியும் முதலும் - 40

இங்கே தொலைக்காட்சியைத் திருப் பினால், ஒரு குட்டிப் பையன், ‚வேணாம் மச்சான் வேணாம்… இந்தப் பொண் ணுங்க காதலு’ என ஏதோ ஒரு ஷோவில் டான்ஸ் ஆடுகிறான். அதிக பட்சம் அவன் மூணாவது நாலாவது தான் படிப்பான். இன்னொரு சேனல் ஷோவில், நாலைந்து குட்டிப் பையன் கள் சேர்ந்து, ‚ஒய் திஸ் கொல வெறி… கொல வெறி… கொல வெறிடி…’ எனப் பாடிக்கொண்டு இருக்கிறார்கள். டுபாக்கூர் படங்களில்கூட, “டேய் இந்தப் பொண்ணுங்களே இப்பிடித் தான்… ஏமாத்திட்டுப் போயிருவா ளுங்க…“ என்பது மாதிரியான வசனங் கள் வந்தால், ஒரு பெரும் கூட்டம் கைத்தட்டி விசில் பறக்கிறது. பெண்கள் என்றாலே ஏமாற்றுக்காரிகள், அல்வா பார்ட்டிகள் என்ற எண்ணம் சின்னஞ்சிறுசுகள் மனதிலேயே இவ்வளவு தீவிரமாக விதைக்கப்பட்டால் என்னவா கும் இந்தச் சமூகம்?

ஒவ்வோர் ஆணின் மனதிலும் ஒளிந் திருக்கும் விஷக் கொடுக்குதான் இதை எல்லாம் செய்கிறது இல்லையா?

நித்யா நான் குடியிருந்த ஹவுஸிங் போர்டில் ஈ ப்ளாக்கில் குடியிருந்தாள். சினிமா டான்ஸர். ஆள் பார்க்க ‚வீடு’ அர்ச்சனாவுக்கு தங்கச்சி மாதிரி இருப் பாள். டைட் ஜீன்ஸும் டாப்ஸுமாக அவள் ஸ்கூட்டியில் போவதைப் பார்த் தால், அங்கங்கே ஆட்கள் ஃப்ரீஸாவார்கள். நைட்டியில் தண்ணி எடுக்கவந்தால், செக்யூரிட்டி வரைக்கும் தேவுடு காப்பார் கள். வேறு வேறு பையன்களை ஸ்கூட்டி பின்னால் வைத்துக்கொண்டு அவள் வந்து போகும் சித்திரங்களை அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். அப்புறம் பால்கனியில் செல்போனோடு சத்தமாகப் பேசிச் சிரித்தபடி நிற்பதை, நள்ளிரவுகளில் அவள் வீடு வருவதையும் பல முறை பார்த்திருக்கிறேன்.

ஒருமுறை மீனாட்சி காலேஜ் பக்கம், ரோட்டில் கார்காரன் ஒருவனோடு ஆவேசமாக சண்டை போட்டுக்கொண்டு இருந்ததைப் பார்த்தேன். ஒருமுறை   கே.எஃப்.சி-யில் குடும்பத்தோடு சாப் பிட்டுக்கொண்டு இருந்தாள்.  “அண்ணா… நீங்க சி ப்ளாக்லதானே இருக்கீங்க?“ என்றாள் சிரிப்போடு. அப்போதுதான் அவளுடைய குடும்பம் பற்றி எனக்குத் தெரியும். அம்மா, அண்ணன், இரண்டு தங்கச்சிகள். அண்ணன் கல்யாணம்   பண்ணி, டைவர்ஸ் பண்ணி இவர்களுடனே வந்து செட்டிலாகிவிட்டான். இவள்தான் குடும்பத்தையே பார்த்துக்கொள்கிறாள். ஆனால், இவளைப் பற்றி ஹவுஸிங் போர்டில் ஒருவர்கூட நல்ல விதமாகப் பேசி நான் கேட்டது இல்லை. “அது   ஒரு மாரி பார்ட்டிப்பா…“ என்பதைத்தான் வேறு வேறு வார்த்தைகளில் சொல்வார் கள். மிகக் கேவலமான வார்த்தைகள்.  ஏதோ ஒரு நாளில் நித்யா அங்கே இருந்து காலி பண்ணிப் போய்விட்டாள். அப்புறம் அவளை நான் பார்க்கவே இல்லை.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, டி.வி-யில் நேரு ஸ்டேடியத்தில் நடந்த ஏதோ ஒரு கலை நிகழ்ச்சியில், ஒருகுத்துப் பாட்டுக்கு பின் வரிசையில் ஆடிக்கொண்டு இருந்த நித்யாவைப் பார்த்தேன். சாலை யில் ‚வ்ர்ர்ரூம்’ எனப் படுவேகமாகக் கடந்து போகிற பெண்கள் எல்லாம் நித்யா மாதிரியே இருக்கும். ஏழெட்டு வருடங்கள் ஆகிவிட்டன அவளைப் பார்த்து.

சமீபத்தில் நண்பர் ஒருவரோடு வெங்க டேஸ்வரா ஹாஸ்பிட்டலுக்குப் போன போது, காத்திருப்பு அறையில் சாய்ந்து உட்கார்ந்திருந்த ஒரு பெண்மணி என்னை உற்றுப் பார்த்துவிட்டு, “அண்ணே… நீங்க ரிப்போர்ட்டர்தானே? புலியூர் ஹவுஸிங் போர்டுல இருந்தீங்கள்ல?“ என்றார். நான் யாரென்று புரியாமல் அவரைப் பார்த் தேன். “நான் நித்யாண்ணே… “ என்றார். அதிர்ந்துவிட்டேன். எக்கச்சக்கமாகக் குண்டடித்து, ஆளே உருமாறி அடையா ளமே தெரியவில்லை.

“ய்யே என்ன நித்யா?“ என்றால், வறண்ட சிரிப்பொன்று சிரித்தாள். கேன்டீனுக்கு நடக்க முடியாமல்

நடந்து வந்தாள். ஒரு ஆள் பார்க்கவில்லை அவளை. எவனும் ஃப்ரீஸாகவில்லை. கேன்டீனில் உட்கார்ந்து பேசினோம். “தைராய்டு ப்ராப்ளம்ணே… எப்பவும் டான்ஸ் வொர்க்னே சுத்திட்டிருந்தேன்ல… சாப்பாடு அது இதையெல்லாம் சரியாவே கவனிக்கலை. குடும்பம், தங்கச்சிகளுக்கு காசு சேக்கணும்னு சுத்திட்டே இருந்ததுல எதுவும் தெரியல… திடீர்னு இது மாதிரி ஆகிருச்சு. ரொம்ப அதிகமாகிருச்சு… சரி பண்ணணும்னா ரொம்ப செலவாகும்னு சொல்றாங்க. ஐ வில் ட்ரைண்ணே…“ என சிரித்தாள். “இப்போ டான்ஸுக்குப் போறதில்லை. நல்ல வேளையா, ரெண்டு தங்கச்சிங்களுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுட்டேன்…“ என்றவளிடம், “நீ கல்யாணம் பண்ணிக்கலையா?“ என்றேன். கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தவள் கரகரவென அழ ஆரம்பித்தாள். “ஏய்… என்ன கேட்டேன்னு அழற… ஸாரி ஸாரி… அழாதம்மா…“ எனப் பதறிய என்னைப் பார்த்து,  கண்ணீரைக்கூட துடைக்காமல் அப்படியே சட்டென்று சிரித்தாள். “சரி வர்றேண்ணே…“ எனக் கலங்கிய கண் களோடு சிரித்தபடி அவள் போனது இப்போதும் அப்படியே இருக்கிறது.

கவர்ச்சிகரமாக நைட்டியில் தண்ணி எடுக்க வந்து நிற்கும் நித்யா நினைவுக்கு வந்தாள். உடம்பை ஒரு சுமையென தூக்கிக் கொண்டு நடந்து போகும் இந்த நித்யாவைப் பார்க்கும்போதே மனசு பிசைந்தது. இப்போது இந்த நித்யாவை யாரும் தவ றாகப் பேச மாட்டார்கள் எனத் தோன்றி யது. ஏமாற்றுக்காரி என்று வசனமோ, பாட்டோ பாட மாட்டார்கள். அவளது கண்ணீரின் அர்த்தம் எனக்கு இப்போதும் புரியவில்லை. எந்த ஆணுக்கும் அது புரியப் போவதும் இல்லை எனத் தோன்றியது. இப்படி ஆயிரமாயிரம் நித்யாக்கள் எங்கெங்கும் இருக்கிறார்கள்தானே?

வட்டியும் முதலும் - 40

கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு தோழிக்கு கல்யாணம். காலையில் அவளைப் பார்க்க மணமகள் அறைக்குப் போனால், அழுது கொண்டு இருந்தாள். “ஏய்… என்னாச்சு?“ என்றால், “எனக்குப் பயமாயிருக்குடா…“ என மறுபடி அழுகை. “வீட்ல பார்த்துத்தான் இந்த மாப்பிள்ளையை ஃபிக்ஸ் பண்ணினது… முதல்ல ரெண்டு பேரும் தனியாப் பேசி னப்போ, ஓ.கே. மாதிரிதான் இருந்தது. நானும் வீட்ல சரின்னு சொல்லிட்டேன். அப்புறம் பேசப் பேச, இவர் ஏகப்பட்ட கண்டிஷன்ஸ் போடுறார்.

மும்பைலதான் வேலை பார்க்கறார்… மொதல்ல சென்னை  வந்து செட்டிலாகிடலாம்னு சொன்னார். நிச்சயத்துக்கு அப்புறம் வேற மாதிரி பேச றார். மும்பைலதான் செட்டிலாகணும்கறார்… வீட்ல இந்த மாப்ளையே வேணாம்னு எவ்வளவோ சொல்லிட்டேன். யாருமே கேட்கலடா… நான் என்னாகப் போறேனோ?“ என அழுதாள். எனக்கு என்ன சொல்வ தென்றே தெரியவில்லை. அவளுக்குக் கல்யாணம் முடிந்தது. கலங்கிய முகத்துடன் அவள் பலருக்கும் கை கூப்பிக்கொண்டு நின்றது புகைப்படங்களாகிக்கொண்டே இருந்தன.

அதன் பிறகு ஒருநாள் மும்பையில் இருந்து அவள் போனில் பேசும்போது, “அய்ய… இந்த ஊரே பிடிக்கலடா… எப்படா அங்க வருவோம்னு இருக்கு. கொஞ்ச கொஞ்சமாப் பேசி இப்போதான் இவர் மனசைக் கரைச்சுட்டு இருக்கேன். பாப்போம்“ என்றாள் பிசிறடிக்கும் குரலில். இப்படி எத்தனை எத்தனை தோழிகள் சின்னச் சின்ன ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும்கூட நிறைவேறாமல் எங்கெங்கும் நிறைந்திருக் கிறார்கள்!

இன்னொரு நண் பன். ஒரு பெண்ணைக் காதலித்து கல்யாணம் பண்ணுவதாய் பேசி அவர்களுக்குள் எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது அவன்தான் அவனுடைய வீட்டில் பேச வேண்டும். “அய்யோ… வீட்ல தங்கச்சிக்கு வரன் பேசிட்டு இருக்காங்க… இப்போ போய்ப் பேச முடியாது. ஒரு வருஷம் வெயிட் பண்ணும்மா“ என அவளிடம் கெஞ்சிப் பேசி சம்மதிக்க வைத்துவிட்டான். அதற்குள் அவள் கர்ப்பம் ஆகிவிட்டாள். மேடிட்ட வயிற்றுடன் அவள் நடமாட ஆரம்பிக்கவும், “ஏதாவது டாக்டர் இருந்தா சொல்லுங்களேன்“ என நண்பர்களிடம் கேட்கத் தொடங்கிவிட்டான். அடையாறில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அபார்ட் பண்ணிவிட்டு தேம்பித் தேம்பி அழுதபடி அந்தப் பெண் ஆட்டோ ஏறிப்போனதைப் பார்க்கவே பாவமாக இருந்தது. ஆண்கள் சட்டென்று கடந்து போய்விடுகிற ஒரு நிகழ்வு, பெண்களுக்கு கணம் கணமும் ரணம்!

வட்டியும் முதலும் - 40

பெண்கள் சிகரெட் பிடிக்கிறார்கள். பப்புக்கு வருகிறார்கள். டிஸ்கோவுக்குப் போகிறார்கள். இதெல்லாம் எவ்வளவு பேர்? எங்கே அய்யா? ஊர்களில் பிள்ளை பெற்றுக்கொள்ளும் ஒன்பதாவது மாசம் வரை வயல் வேலைக்குப் போகிறார்கள். மில்லு வேலைக்கும் பிளாஸ்டிக் கம்பெனி வேலைக்கும் போய் பிள்ளைகளைக் காப்பாற்ற அல்லல்படுகிற தாய்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? குல சாமிகளாகப் பெண் தெய்வங்களைக் கும்பிட்டுக் கொண்டாடும் நாம் நமக்கான உயிர்கொண்ட மனுஷிகளைக் கொண்டா டுகிறோமா? தப்பான பார்வைகள், கேலிப் பேச்சுகள், வக்கிரமான வதந்திகள் என இவற்றாலேயே சிதைந்துபோன பெண்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

பெண்கள் இல்லாமல் ஆண்களால்    ஒரு நாள் ஜீவித்திருக்க முடியுமா? நம்மில் எத்தனை பேர் அவர்களைச் சரிசமமாய் சரிபாதியாய்ப் பார்க்கிறோம்? திடீரென்று யோசித்துப் பார்த்தேன். எனக்கு என் அம்மாவின் இளமைக் காலம் பற்றி எதுவுமே தெரியாது. அவளது சிறுபிராயம், படிப்பை நிறுத்தியபொழுதுகள், விளை யாட்டு, காதல் எதுவுமே தெரியாது. ஏனோ அது பற்றி எல்லாம் கேட்காமல் பேசாமலேயே இத்தனை காலம் வந்திருக் கிறோம். இப்படி எத்தனை எத்தனை அம்மாக்கள் இருக்கிறார்கள்… பகிரப்படாத நினைவுகளோடு!

முன்பு நான் தங்கியிருந்த ஒரு குடியிருப் பில் கீழ் வீட்டில் ஒரு தம்பதி குடியிருந்தனர். அந்த ஆள் தினமும் மனைவியைக் கண்ட படி திட்டிக்கொண்டே இருப்பார். அச்சடிக்க முடியாத வார்த்தைகளால் கடாசுவார். அக்கம்பக்கத்து ஆட்களெல் லாம் பயங்கர டென்ஷனிலேயே இருப்பார் கள். அவர் அடிக்கடி, “இந்த பொம்பளைக் கழுதைங்களே இப்பிடித்தானடி… தே…… ஒன்னையெல்லாம் எவன்டி நம்புவான்?“ என்கிற வார்த்தைகளாலேயே சுடு தண்ணியை வீசுவார். அந்த பெண்மணி அமைதியாக உட்கார்ந்தே இருப்பார்.

தனது பெண் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்து கேட் பக்கத்திலேயே நிற் பார். எனக்கெல்லாம் அவ்வளவு கோபம் வரும். தினமும் இப்படியே கிடக்கும். ஒருநாள் அந்த ஆள் திடுதிப்பென்று செத்துப் போய்விட்டார். நெஞ்சு வலியில் பொட்டென்று போய்விட்டார். வெளியே கண்ணாடி பெட்டியில் வைத்திருந்தார்கள். அந்தப் பெண்மணி உருண்டு புரண்டு அழுதார். தடுக்கவே முடியாமல் அப்படி அழுதார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“அவ்வளவு கேவலமான ஆளுக்கா இப்படி அழுவுது இந்தம்மா?“ இதைக் கேட்டு மேல் வீட்டுத் தாத்தா சொன்னார், “பொம்பளைங்க அப்பிடித்தான் தம்பி… என் அனுபவத்துல சொல்றேன்… நாமெல்லாம் அவங்களோட நெழலுக்குக் கூட துப்பில்ல!“