`தனி மனிதராக எதையும் சாதிக்க முடியாது‘ வைரலாகும் ஒபாமாவின் உரையின் முழுப்பகுதி!  #Graduation2020

ஒபாமா

ஒபாமா ( Instagram )

ஒபாமாவின் பேச்சு இந்தப் பேரிடர் காலத்தில் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது, மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இதைக் கேட்க வேண்டும் என ட்விட்கள் குவிந்தபடி இருக்கின்றன.

கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான 2020 பட்டமளிப்பு தினம் நேற்று அமெரிக்காவில் கொரோனா ஊரடங்குக்கு நடுவே வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 1.2 மில்லியன் பேர் இந்த ஆண்டு பட்டம் பெற்றுள்ளனர்.

கலிபோர்னியா மாகாணக் கலைக்கல்லூரியிலிருந்து இந்தாண்டு இளங்கலை கவின்கலைப் பட்டம் பெற்றிருக்கும் ரேச்சல் ஹேண்டலினுக்கு, இந்தப் பட்டமளிப்பு நாள் கூடுதல் ஸ்பெஷல். டவுன் சிண்ட்ரோம் நோயினால் பாதிக்கப்பட்டவர் ரேச்சல்.

ரேச்சல் ஹேண்டலின்

ரேச்சல் ஹேண்டலின்
Twitter

„தன்னைப் பற்றிப் புறம் பேசியவர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறாள் என் மகள் ரேச்சல். நான், இந்த உலகத்திலேயே பெருமைக்குரிய தந்தையாகத் தற்போது உணருகிறேன்” எனத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ரேச்சலின் தந்தை ஜே ஹேண்டலின்.

முதல் தலைமுறையாக மேல்நிலைப்பள்ளியை முடித்தவர், ஆறு வருட கடும் உழைப்புக்குப் பிறகு முனைவர் பட்டம் பெற்றவர், பல போராட்டங்களைக் கடந்து கல்லூரிப் படிப்பை முடித்தவர் என நேற்றைய பட்டமளிப்பு நிகழ்வில் பங்கேற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் ரேச்சல்போல ஒவ்வொரு கதை இருக்கிறது. அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து முழுவதும் ஆன்லைன் வழியாக நடந்து முடிந்திருக்கும் இந்தப் பட்டமளிப்பு தினத்தில் முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், பாரக் ஒபாமா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் ஒபாமா நிகழ்த்திய உரைதான் தற்போது வைரலாகியுள்ளது. ஒபாமாவின் பேச்சு இந்தப் பேரிடர் காலத்தில் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது, மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இதைக் கேட்க வேண்டும் என ட்விட்கள் குவிந்தபடி இருக்கின்றன. அவர் பேசியதன் முழு மொழிபெயர்ப்பு பின்வருமாறு,

Obama

Obama

“இந்த ஆண்டு பட்டம்பெறும் மாணவர்கள் அவர்களது ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரிடமும் நான் பெருமை கொள்கிறேன். பட்டம் பெறுவது என்பது எந்த ஒரு சூழலிலும் பெரும் சாதனைதான். சிலர் பெரும் நோய்களைக் கடந்து வந்திருப்பீர்கள் அல்லது உங்களது பெற்றோரின் வேலை பறிக்கப்பட்டிருக்கும் அல்லது இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவராக இருந்திருப்பீர்கள். இவை தவிர சமூக ஊடகங்கள் கொடுக்கும் அழுத்தம், பள்ளிகளில் நிகழும் துப்பாக்கிச் சூடுகள் குறித்து வரும் செய்திகள், கண்முன்னே நிகழும் காலநிலை மாற்றம் என, அத்தனையும் கொடுக்கும் அழுத்தங்களையும் கடந்து பட்டமளிப்பு விழாக்களுக்காக நீங்கள் தயாராகிக் கொண்டிருந்தபோதுதான் இந்தச் சர்வதேசத் தொற்றால் தற்போது உலகமே தலைகீழாகிக் கிடக்கிறது. நாம் அனைவருமே நமது பெற்றோர்களை நேசிப்பவர்கள்தான் ஆனால், வீட்டிலேயே மாதக்கணக்கில் முடங்கியிருந்து அவர்களுடன் பொழுதைக் கழிக்கவேண்டியிருக்கும் என நாம் கடந்த காலங்களில் யோசித்துக்கூட இருக்க மாட்டோம்.

நான் தற்போது உங்களுடன் நேர்மையாகச் சிலவற்றைப் பகிர்கிறேன். பட்டமளிப்பு விழாவில் நேரடியாகப் பங்கேற்க முடியவில்லை என்கிற மனக்கஷ்டம் கால ஓட்டத்தில் மறைந்துவிடும். எனது பள்ளிப் பட்டமளிப்பு எப்படி நிகழ்ந்தது என்பது எனக்குத் தற்போது அவ்வளவாக நினைவில் இல்லை. என்னுடைய பட்டமளிப்பு உரைகள் மிக நீண்ட நேரம் நடக்கும். மற்றபடி பட்டமளிப்பு விழாக்களில் பேசுவதைக் கேட்பது அத்தனை மோசமானதாக இருந்ததில்லை. பட்டம் பெறும்போது அணிந்துகொள்ளும் கேப் எல்லோருக்கும் பொருந்தியும் போகாது. குறிப்பாக என்னைப் போன்ற பெரிய காதுகளை உடையவர்களுக்கு நிச்சயம் பொருந்திப் போகவே போகாது. மற்றபடி இந்தப் பொதுச்சுகாதாரச் சீர்கேடு சரியானதும் நண்பர்களைச் சந்தித்துப் பேசப் போதுமான கால அவகாசம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.

#Graduation2020

#Graduation2020
Ted S. Warren

உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டிய பருவம் இனி தொடங்குகிறது. நீங்கள் தேர்ந்தெடுத்துப் படிக்க விரும்பும் துறை, நீங்கள் உங்கள் வாழ்க்கைக்காகத் தேர்ந்தெடுக்கும் துணை, உங்கள் வாழ்க்கைக்கான கொள்கைப் பிடிமானம் அனைத்தையும் முடிவெடுக்க வேண்டிய காலம் இது. ஆனால், உலகம் தற்போது இருக்கும் சூழலில் இவற்றை யோசிப்பது அச்சத்துக்குரியதாக இருக்கிறது.

ஜனநாயகத்தின் இயங்குதல் நாம் ஒருவரைப் பற்றி மற்றொருவர் சிந்திப்பதில்தான் சாத்தியப்படும், சுற்றி இருப்பவர்கள் பசித்து நோயுற்றிருக்கும்போது வெறுமனே பணம் ஈட்டுவதில் எவ்விதப் பயனுமில்லை

ஒபாமா

இலையுதிர்காலத் தொடக்கத்தில் நாம் கல்லூரியில் சேர்ந்துவிடுவோம், கல்லூரி முதல் நாளில் பெற்றோர்கள் தங்களது காரில் அழைத்துச் சென்று நம்மை இறக்கிவிடுவார்கள் என்று இதுநாள் வரை நீங்கள் தேக்கி வைத்திருந்த கனவு நெடுந்தூரம் விலகி இருக்கிறது. பகுதிநேரமாக வேலை பார்த்துக் கொண்டே நீங்கள் படிக்க வேண்டும் என நினைத்திருந்தால் உங்களுடைய முதல் வேலையைப் பெறுவது தற்போது சந்தேகத்துக்குரியதாகி இருக்கிறது. நல்ல நிலையில் இருந்த பல குடும்பங்கள் தற்போது எதுவும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டு வருகின்றன. ஏற்கெனவே துன்பங்களைச் சந்தித்து வந்த குடும்பங்கள் தற்போது நூலிழையில் தங்களது நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு உள்ளார்கள்.

இதனால் இதற்கு முந்தைய தலைமுறைகளைவிட மிக வேகமாக வளரும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறீர்கள். இந்தச் சர்வதேசத் தொற்று நமது நாட்டின் தற்போதைய நிலையை ஆட்டம் காணச் செய்திருக்கிறது.அதன் வழியாக இந்த நாட்டில் மிக நீண்டகாலமாக ஆழமாக வேரூன்றி இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, நிறவேற்றுமை, அடிப்படைச் சுகாதாரப் போதாமை உள்ளிட்டப் பிரச்னைகள் தற்போது வெட்டவெளிச்சமாகத் தெரியத் தொடங்கி இருக்கின்றன. இந்தச் சூழல் இனி பழைமைவாதம் இனி நமக்குப் பயன்படப்போவதில்லை என்பதை இளையதலைமுறைக்கு உணர்த்தி இருக்கிறது. ஜனநாயகத்தின் இயங்குதல் நாம் ஒருவரைப் பற்றி மற்றொருவர் சிந்திப்பதில்தான் சாத்தியப்படும், சுற்றி இருப்பவர்கள் பசித்து நோயுற்றிருக்கும்போது வெறுமனே பணம் ஈட்டுவதில் எவ்விதப் பயனுமில்லை என்பதை அவர்களுக்குப் புரியவைத்திருக்கிறது.

#Graduation2020

#Graduation2020
Ross D. Franklin

இந்தக் காலம் உங்களது பிள்ளைப்பருவத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. இவர்களால் தீர்வு கிடைக்கும் என நீங்கள் இதுநாள் வரை நம்பியிருந்தவர்களிடம் இந்தச் சூழலுக்கான பதில் இல்லை, சிலரிடம் இதற்கான சரியான கேள்விகளே இல்லை. ஆகையால், இனி இந்த உலகம் ஆற்றுப்படுவது உங்கள் கையில்தான் இருக்கிறது.

இந்த நிச்சயமற்றச் சூழலில் பெரியவர்கள் எவரும் `உனக்கு இது புரியாது நீ சிறுமி எனவோ ’இதை இதுநாள் வரை இப்படித்தான் செய்து வந்தோம் நீயும் இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்று கட்டளையிடவோ முடியாது. அதனால், இந்த உலகத்தை மறுமையாக வடிவமைக்கும் வாய்ப்பு நீங்கள் பற்றிக்கொள்ளக் கிடைத்திருக்கிறது.

இந்தப் பெரியவர்களின் கூட்டத்தில் நானும் ஒருவன் என்பதால் உங்கள் கையில் கிடைத்திருக்கும் ஆற்றலைக் கொண்டு, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என நான் சொல்லப் போவதில்லை ஆனால், மூன்றே மூன்று அறிவுரைகளை மட்டும் கூறிக் கொள்கிறேன்.

ஒருவர் மற்றொருவருடைய போராட்டங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருங்கள். ஒருவர் மற்றொருவருடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுங்கள்.

ஒபாமா

  • பயம்கொள்ளாதீர்கள். அமெரிக்கா இதற்கு முன்பும் பல கடினமான சூழல்களைக் கடந்து வந்திருக்கிறது. அடிமைமுறை, சிவில்யுத்தம்,பஞ்சம், பிணி, 9/11 என அத்தனையிலிருந்தும் நாம் மீண்டு வலுவாக எழுந்திருக்கிறோம். அந்தச் சூழல்களில் உங்களைப் போன்ற இளைய தலைமுறைகள்தான் கடந்தகாலத்தின் தவறுகளைத் திருத்தி அமெரிக்காவைக் கடைத்தேற்றியிருக்கிறார்கள்.
  • உங்களுக்குச் சரியெனத் தோன்றியதைச் செய்யுங்கள். தங்களால் முடிந்ததை, தங்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியதைத்தான் பிள்ளைகள் சிந்திப்பார்கள். ஆனால், அதனால்தான் நிலைமை சிக்கலாவதாகப் பெரியவர்கள், பெரும் பொறுப்புகளில் இருப்பவர்கள் சொல்லுவார்கள். ஆனால் நேர்மை, கடின உழைப்பு, பொறுப்பு, தாராளமனப்பான்மை, பிறருக்கு மரியாதை போன்ற நீட்டித்த பண்புகளால் நீங்கள் உங்களை உருவாக்கிக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். எல்லா நேரங்களிலும் உங்களது செயல் சரியாக அமைந்துவிடாது. சிலநேரங்களில் எங்களைப் போலவே நீங்களும் தவறிழைக்கக் கூடும். அத்தகைய கடினமான சூழல்களில்கூட உங்களது உண்மைத்தன்மைதான் அனைவரையும் உற்றுநோக்க வைக்கும். அவர்களை உங்களை நோக்கி ஈர்க்கும். பிரிதொரு நாளில் தீராத பிரச்னைகளின் பக்கமில்லாமல் தீர்வுகளின் பக்கம் நீங்கள் இருப்பீர்கள்.
  • இறுதியாக, தனியொரு மனிதராக எதையும் சாதித்துவிட முடியாது. ஒரு சமூகத்தைக் கட்டமையுங்கள். இந்த அச்சமூட்டும் காலத்தில் மனிதப் பண்புகளின்றிச் செயல்படுவது எளிது. நான், என் குடும்பம், என்னைப்போலவே சிந்திக்கும் என்னைப்போலவே இருக்கும் மக்களை மட்டும் பார்த்துக்கொள்கிறேன் என்கிற எண்ணத்தை நாம் எளிதில் வளர்த்துவிடலாம். ஆனால், இந்த ஊழிக்காலத்தைக் கடக்க வேண்டும் என்றால், அதற்குப்பிறகான உலகில் எல்லோருக்கும் கல்வியும் வேலைவாய்ப்பும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்றால், இனிவரும் காலங்களில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து இதுபோன்ற அச்சுறுத்தல்களைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் அதை நாம் ஒன்றிணைந்து செய்தால் மட்டுமே சாத்தியம். ஒருவர் மற்றொருவருடைய போராட்டங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருங்கள். ஒருவர் மற்றொருவருடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுங்கள். பாலியல்பொதுமைச் சிந்தனைகள், நிற வேற்றுமை, தகுதி, பேராசை என நம்மை இதுநாள் வரைப் பிரித்த பழைமைவாத எண்ணங்களைத் தூக்கியெறிந்துவிட்டுப் புதிய பாதையில் இந்த உலகத்தை வழிநடத்துங்கள்.

உங்களுக்காக மிஷலும் நானும் எங்களது பவுண்டேஷன் வழியாக உதவத் தயாராக இருக்கிறோம். ஆனால் உண்மையில் எங்களது உதவி உங்களுக்குத் தேவையாக இருக்காது, ஏனெனில் ஏற்கெனவே நீங்கள் உலகை வழிநடத்தத் தொடங்கிவிட்டீர்கள்.