September 11, 2024

பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் சுமந்திரன்….. தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விபரத்தையும் வழங்கினார்!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும், எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையில் இன்று இரவு கலந்துரையாடல் நடைபெற்றது.

இது குறித்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களிற்குமிடையிலான கலந்துரையாடல் இன்று இரவு கொழும்பிலுள்ள பிரதமரின் இல்லத்தில் இடம்பெற்றது.

கடந்த திங்கட்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை கௌரவ பிரதமர் அவர்கள் திரு சுமந்திரனிடம் கேட்டறிந்ததோடு முழுமையான விபரங்களை தன்னிடம் சமர்ப்பிக்கும்படிக்கும் கேட்டிருந்தார்.

இதனடிப்படையில் தமிழ் அரசியலை கைதிகளின் முழுவிபரங்களும் முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர் அம்பிகா சற்குணம் அவர்களின் பங்களிப்புடன் உறுதி செய்யப்பட்டு முழுமையான அறிக்கை ஒன்றினை திரு சுமந்திரன் அவர்கள் இன்று பிரதமர் அவர்களிடம் கையளித்தார்.

இந்த கைதிகளுள் வழக்குகள் முடிவிற்கு வந்தவர்கள் தொடர்பில் தான் ஜனாதிபதி அவர்களுடன் பேசுவதாகவும் திரு சுமந்திரன் அவர்களையும் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுமாறும் கேட்டுக்கொண்ட பிரதமர் அவர்கள் ஏனையோர் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் திரு சுமந்திரனோடு கலந்துரையாடிய பிரதமர் அவர்கள், தாம் புதிய அரசியல் யாப்பொன்றினை உருவாக்கும் பணிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் ஜனாதிபதி அவர்களின் கொள்கை விளக்க உரையில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் இதனை உறுதி செய்துள்ளதனையும் சுட்டிக்காட்டினார். புதிய பாராளுமன்றம் கூடுகின்றபோது இது தொடர்பிலான நடவடிக்கைகளை தாம் ஆரம்பிக்கின்றபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இந்த முயற்சிகளிற்கு அத்தியாவசியமாகும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கி ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் இடம்பெறுகின்றபோது அத்தகைய நடவடிக்கைகளிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு நிச்சயம் இருக்கும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள தேசிய பிரச்சினைக்கான தீர்விற்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

சுமார் ஒரு மணித்தியாலம் வரை நீடித்த இக்கலந்துரையாடலில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாக கௌரவ பிரதமர் அவர்கள் உறுதியளித்தார்.