இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான ஆவணத்தில் தமிழ்க் கட்சிகள் ஒப்பம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காக தமிழ் பேசும் தரப்புக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவணம் ஒன்றில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் கட்சிகள் இன்று ஒப்பமிட்டன.
கடந்த 21ஆம் திகதி இறுதி செய்யப்பட்ட ஆவணத்தில் சம்பந்தன் உட்பட பல தலைவர்களும் இன்று ஒப்பமிட்டனர்.
அது விரைவில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஊடாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைக்கப்பட்டவுள்ளது.
அந்த ஆவணத்தில் இரா.சம்பந்தன் (தலைவர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு), சி.வி.விக்னேஸ்வரன் (தலைவர் – தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி), சுரேஷ் பிரேமச்சந்திரன் (தலைவர் – ஈ.பி.ஆர்.எல்.எப்.), என்.ஸ்ரீகாந்தா (தலைவர் – தமிழ்த் தேசியக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (தலைவர் – ரெலோ), த.சித்தார்த்தன் (தலைவர் – புளொட்) ஆகியோர் இன்று ஒப்பமிட்டனர். மாவை சேனாதிராஜா (தலைவர் – இலங்கைத் தமிழரசுக் கட்சி) எந்த நேரத்திலும் அந்த ஆவணத்தில் ஒப்பமிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்தார். அவரது தரப்பினதும், முஸ்லிம்கள் தரப்பினதும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவர்களின் பங்களிப்பு இல்லாமலேயே பொது ஆவணத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பும் முடிவை இந்தச் சந்திப்பின்போது மனோ கணேசனுடன் நேரிலும், ரவூப் ஹக்கீமுடன் தொலைபேசியிலும் பேசி சம்பந்தன் எடுத்தார்.
கடந்த 21ஆம் திகதி கொழும்பிலுள்ள குளோபல் டவர் ஹோட்டலில் நடைபெற்ற தமிழர் தரப்புக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட கடிதமே இப்போது தமிழ்க் கட்சிகளின் தலைவர்களால் ஒப்பமிடப்பட்டு இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படுகின்றது.
சம்பந்தன் தலைமையிலான தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்தியத் தூதுவரைச் சந்தித்து இந்தக் கடிதத்தை அவர் மூலம் இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைப்பர் எனத் தெரிகின்றது