என்ன செய்யும் ஒமைக்ரான்? எலிகளிடம் நடத்திய ஆராய்ச்சியில் ஆறுதல் தகவல்கள்
உலக நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய கோவிட்-19 எனப்படும் கொரோனா தொற்று, தடுப்பூசிகளின் எதிர்ப்புக்குப் பிறகும் அடங்க மறுத்து, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என அடுத்தடுத்த உருமாற்றங்களின் மூலம் இன்னும் அச்சுறுத்தலாகவே நீடித்து வருகிறது.
இப்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு, உலக நாடிகள் அனைத்திலும் சுனாமியாகப் பரவி வரும் ஒமைக்ரான் வேரியன்ட், டெல்டா வேரியன்ட்டை விடவும் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துவதாகவும், அதே சமயம் விரைவாகப் பரவுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், ஏன் இப்படி நடக்கிறது என்பதை விளக்கவில்லை. தற்போது, எலிகளை வைத்து நடத்திய ஆய்வுகள் அதற்கு விடை அளித்துள்ளன.
மனிதனின் சுவாச மண்டலத்தை இரண்டாகப் பிரிக்கலாம். வாய், மூக்கு, தொண்டை போன்றவை மேல் சுவாச மண்டலம். மூச்சுக்குழல், நுரையீரல் போன்றவை கீழ் சுவாச மண்டலம்.
இதில், ஒமைக்ரான் வகை வைரஸானது, கீழ் சுவாச மண்டலமான நுரையீரலில் மிகக்குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகிறது. பெர்லின், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன் உள்பட அண்மையில் பல இடங்களிலும், எலிகளை வைத்து நடந்த சோதனைகளில் இது உறுதியாகியிருக்கிறது.
இதற்கு முன்பு வெளியான ஆய்வு முடிவுகளுமேகூட, ஒமைக்ரான், டெல்டாவைவிட குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்று கூறின. ஆனால், ஏன் அப்படி என்பதற்கான விடை அப்போது இல்லை.
மேலும், தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் அலை உச்சத்திலிருந்தபோதும், மருத்துவமனையில் சேர்ந்திருந்த நோயாளிகளிடம் ஒமைக்ரான் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், முதல்கட்டமாக அதிக அளவில் இளைஞர்களிடம் மட்டுமே ஓமைக்ரான் பரவியதால் இப்படி நடக்கிறதா அல்லது முந்தைய கொரோனா பாதிப்பினாலோ, தடுப்பூசியினாலோ மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றிருப்பதால் இப்படி நடக்கிறதா என்பது குறித்து அப்போது உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
ஆனால், தற்போது இந்த இரண்டு சந்தேகங்களுக்கும் விடைசொல்லியிருக்கின்றன அண்மைய ஆராய்ச்சிகள்.
ஒமைக்ரான் குறித்து விஞ்ஞானிகள் அச்சப்படக் காரணமே, இது சுமார் 50 முறை உருமாற்றம் அடைந்திருந்ததால் தான். இதனால், இதன் வீரியம் தீவிரமாக இருக்கலாம் எனக் கணித்திருந்தனர். ஆனால், தற்போது எலிகளிடையே நடத்தப்பட்ட சோதனைகளில் அப்படியில்லை என்று தெரியவந்திருக்கிறது.
ஒமைக்ரான் தாக்கிய எலிகளை ஆராய்ச்சி செய்தபோது, அவற்றின் மூக்கு பகுதியில் வைரஸின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கிறது. ஆனால், நுரையீரலில் 10-ல் ஒருமடங்கு அல்லது அதற்கும் குறைவான அளவே ஒமைக்ரான் வைரஸ் எண்ணிக்கை இருந்திருக்கிறது.
பொதுவாக கொரோனா, மூக்கு, தொண்டைப் பகுதிகளை பாதித்தால் பிரச்சினையில்லை. விரைவில் குணமடைந்துவிடலாம். ஆனால், வைரஸ் நுரையீரலை அடையும்பட்சத்தில் அது நம்மை உயிரிழப்பு வரை கொண்டு செல்லலாம். ஒமைக்ரான் விஷயத்தில் அது நடக்கவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்.
“பெரும்பாலான நுரையீரல் செல்கள், டிஎம்பிஆர்எஸ்எஸ்2 (TMPRSS2) என்ற புரதத்தைக் கொண்டிருக்கும். இதற்கு முந்தைய கொரோனா வேரியன்ட்கள் நுரையீரலுக்குள் நுழைந்தபோது, இந்தப் புரதம்தான், கொரோனா வைரஸ் செல்களுக்குள் நுழைய உதவி செய்திருக்கிறது. ஆனால் ஒமைக்ரானை, இது அப்படி அனுமதிக்கவில்லை. எனவேதான், நுரையீரல் பகுதியில் ஒமைக்ரானால் பல்கிப்பெருக முடியவில்லை” என்று கருதுகிறார், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானி ரவீந்திர குப்தா.
அப்படியெனில் இனி அச்சப்பட வேண்டாம் அல்லவா என்று கேட்டால், “அவசரப்படாதீர்கள்,
அப்படி சொல்லிவிட முடியாது. ஏனெனில், இந்த ஆராய்ச்சிகள் ஏன் ஒமைக்ரான் நுரையீரலை விட்டுவைக்கிறது என்பதற்கு மட்டுமே விடைசொல்லியிருக்கின்றன. இதுவும்கூட முதல்கட்ட ஆய்வுகள்தான். இதைத் தொடர்ந்து குரங்குகள் மற்றும் மனிதர்களிடமும் ஆய்வு நடத்தியபின்புதான் 100% ஒரு முடிவுக்கு வரமுடியும்” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இன்னும் விடை தெரியாத கேள்விகள்
இதுபோக,
(1) ஒமைக்ரான், ஏன் இவ்வளவு வேகமாகப் பரவுகிறது?
(2) காற்றில் ஒமைக்ரானால் எந்த அளவு திறம்படப் பரவ முடிகிறது?
(3) 50 முறை உருமாறிய ஒமைக்ரானுக்கு, வேறு ஏதேனும் ஆபத்தான குணங்கள் இருக்கின்றனவா?
இவை போன்ற கேள்விகளுக்கெல்லாம் இன்னும் விடை தெரியவில்லை.
முதன்முதலாக ஒமைக்ரான் வேரியன்ட் உறுதிசெய்யப்பட்ட தென் ஆப்பிரிக்காவில், புதிய கொரோனா அலை உச்சந்தொட்டு, தற்போது அங்கு தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. இதனால், அங்கு இரவு நேர ஊரடங்கு தளர்வுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த அலையில், டெல்டாவை விடவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் விகிதம் குறைந்திருப்பதையும் அந்நாடு உறுதி செய்திருக்கிறது. இவையெல்லாம் நமக்கு ஆறுதல் அளிக்கும் செய்திகள்.
ஆனால், இந்தியாவில் இப்போதுதான் கொரோனா எண்ணிக்கை மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துகொண்டிருக்கிறது. இனிதான் இதன் தாக்கத்தையே நாம் உணரப்போகிறோம். எனவே, நாம் மிகவும் உஷாராகத்தான் இருக்கவேண்டும் என்கின்றனர், இந்திய மருத்துவ வல்லுநர்கள்.
ஏற்கெனவே பார்த்ததுபோல, ஒமைக்ரான் மேல் சுவாச மண்டலமான வாய், மூக்கு, தொண்டையைத்தான் அதிகம் பாதிக்கிறது. அங்கிருந்து விரைவாகப் பரவவும் செய்கிறது. எனவே, நம்மிடமிருந்து பிறருக்கு கொரோனா பரவாமல் இருக்கவும், பிறரிடமிருந்து நமக்குப் பரவாமல் இருக்கவும் முகக்கவசம் என்னும் ஆயுதம் நமக்கு மிக முக்கியம்.
முந்தைய கொரோனா பாதிப்புகளிலிருந்து உருவான ஆன்டிபாடிகள்கூட, ஒமைக்ரானைத் தடுப்பதில்லை என்பதால், தடுப்பூசிகள் அதை மிக முக்கியம்.
எனவே, இந்தியாவிலும் ஒமைக்ரான் அலை ஓயும் வரை, மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
-மணிராஜ்,