சிலை கடத்தல்:சிங்கள படைச்சிப்பாய் கைது!
உயர்பாதுகாப்பு வலயத்தினுள் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இராணுவ பொலிஸாரினால் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
டிசெம்பர் 9ஆம் திகதிக்கும் 23ஆம் திகதிக்கும் இடையே தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்பட்டன.
அத்துடன் உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள இந்து ஆலயங்களில் திருடப்பட்ட விக்கிரகங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கொழும்பில் வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட மேலும் 20இற்கு மேற்பட்ட விக்கிரகங்களை மீட்கப்பட்டன.
அவற்றை கொள்வனவு செய்த வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ளனர் .
அவற்றில் பல இராணுவ மற்றும் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களின் இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் 42 வயதுடைய இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டு தெல்லிப்பழை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.