தமிழரசுக்கட்சியைத் தவிர்த்து கையெழுத்து!!
இலங்கை தமிழரசுக்கட்சி மீள் திருத்தப்பட்ட வரைவினை முழுமையாக நிராகரித்துள்ள நிலையில் அக்கட்சியை தவிர்த்து விட்டு ஏனைய தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டு கூட்டு ஆவணத்தினை அனுப்புவதா இல்லையா என்பது தொடர்பில் கட்சிகளின் தலைவர்கள் கூடிப்பேசவுள்ளனர்.இந்தக் கூட்டம் எப்போது நடைபெறும் என்பது தொடர்பில் இச்செய்தி அச்சுக்குச் செல்லும் வரையில் தீர்மானிக்கப்படவில்லை.
தமிழ் பேசும் கட்சிகளின் ஒருங்கிணைவுப் பணியை முன்னெடுத்த ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சொந்தக் காரணங்களின் காரணமாக அவசரமாக நேற்று முன்தினம் மன்னாருக்குத் திரும்பியுள்ள நிலையில் பெரும்பாலும் இன்றையதினத்திற்குள் அவர் மீண்டும் கொழும்பு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் அவர் கொழும்பு திரும்பியதும் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களை மீண்டும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இதன்போது தமிழரசுக்கட்சியின் தீர்மானம் தொடர்பில் பரிசீலனை செய்யப்படவுள்ளதோடு அக்கட்சியை தவிர்த்து விட்டுச் செல்வதா இல்லையா என்பது குறித்தும் இறுதியான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இதேநேரம், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் மீண்டும் சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோருடன் சந்திப்புக்களைச் செய்யவுள்ளதோடு மனோகணேசன், ஹக்கீம் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இறுதியாகப் போகும் வரைவு எது?
இதேவேளை, தமிழரசுக்கட்சியை தவிர்த்து விட்டு பிரதமர் மோடிக்கு கூட்டு ஆவணத்தினை அனுப்புவதாக இருந்தால் எந்த வரைவினை இறுதி செய்வது என்பது தொடர்பில் கேள்விகள் உள்ளன.
அதாவது, ஏற்கனவே ரெலோவினால் தயாரிக்கப்பட்ட ஆரம்ப வரைவில் கையொப்பமிடுவதாக இல்லை. நேற்று முன்தினம் சுமந்திரனின் இல்லத்தில் ஹக்கீம் தரப்பின் பங்கேற்புடன் இறுதி செய்யப்பட்ட ‘தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளுக்கான ஆட்சி அதிகாரப் பகிர்வு’ என்ற வரைவினை இறுதி செய்வதா என்பது தொடர்பிலும் கட்சித்தலைவர்கள் அவதானம் செலுத்தவுள்ளனர்.
அதேநேரம், சம்பந்தனையும், தமிழரசுக்கட்சியையும் உள்ளீர்த்து பிரதமர் மோடிக்கு அனுப்பு கூட்டு ஆவணத்தை இறுதி செய்வதாக இருந்தால் கட்சித்தலைவர்கள் அனைவராலும் கடந்த 21ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட 7 பக்கங்களைக் கொண்ட ‘தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்’ என்ற வரைவினை இறுதி செய்வதாக இருந்தால் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றுக்கு காணப்படுகின்ற கரிசனைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு வாய்ப்புக்கள் உள்ளனவா என்பது குறித்தும் பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.